தேடுதல்

Vatican News
மாசிடோனியா திருத்தூதுப்பயணம் மாசிடோனியா திருத்தூதுப்பயணம்  (AFP or licensors)

அன்னை தெரேசாவே, எமக்காக இறைவனை மன்றாடும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபர் 3ம் தேதி, இத்தாலியின் அசிசி நகரில், புனித பிரான்சிஸ் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபின், மனித உடன்பிறந்தநிலை பற்றிய திருமடல் ஒன்றில் கையெழுத்திடுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொல்கத்தா புனித அன்னை தெரேசாவின் திருநாளாகிய செப்டம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, அன்னை தெரேசாவே, எங்களுக்காக இறைவனை மன்றாடும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அனைவருக்காகவும், தன் டுவிட்டர் செய்தி வழியாக இறைவேண்டல் செய்துள்ளார்.

“அன்னை தெரேசாவே, பிறரன்பின் அயராத பணியாளரே, எங்களுக்காக இறைவனை மன்றாடும், அப்போது, எமது செயலுக்கு, அடிப்படைத் தத்துவமாக, மொழி, கலாச்சாரம், இனம், மதம் ஆகிய வேறுபாடின்றி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு அமையும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

செப்டம்பர் 5, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட உலக பிறரன்பு நாளை மையப்படுத்தி, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில், இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.

அதிகத் தேவையில் இருப்போரின் புனிதரான, அன்னை தெரேசா, 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, கொல்கத்தாவில் இறைபதம் அடைந்தார். அந்த நாளை, உலக பிறரன்பு நாளாகச் சிறப்பிக்கவேண்டுமென்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2012ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும், மதங்களைச் சார்ந்த மக்கள் மத்தியில், உரையாடலையும், புரிந்துணர்வையும், தோழமையையும் ஊக்குவிப்பதற்கு, உலக பிறரன்பு நாள் உதவவேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.

புனித அன்னை தெரேசா, 1979ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது, 1980ம் ஆண்டில் இந்தியாவின் தலைச்சிறந்த விருதான பாரத இரத்னா விருது உட்பட, பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

மனித உடன்பிறந்தநிலை

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபர் 3ம் தேதி, இத்தாலியின் அசிசி நகரில், புனித பிரான்சிஸ் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபின், மனித உடன்பிறந்தநிலை மற்றும், சமுதாய நட்புறவு பற்றிய “அனைவரும் உடன்பிறப்புகள் (Fratelli tutti)” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள திருமடல் ஒன்றில் கையெழுத்திடுவார்.

இதனை அறிவித்த திருப்பீடத் தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், திருத்தந்தையின் திருப்பலி, கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

மேலும், சான் மரினோ குடியரசின் தலைவர்களான, Alessandro Mancini அவர்களையும்,  Gloria Zafferani அவர்களையும், செப்டம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார்.

05 September 2020, 13:57