தேடுதல்

Vatican News
துயரங்கள் நிறைந்த அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் துயரங்கள் நிறைந்த அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  

வியாகுல அன்னை, வறியோருக்காக துயருறுகிறார்

புனித மரியாவின் துயரங்கள் குறித்த பக்தி , 14 மற்றும், 15ம் நூற்றாண்டுகளில், மரியின் ஊழியர் சபை துறவிகளால், உலகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், இந்த விழா செப்டம்பர் 15ம் தேதி சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துயரங்கள் நிறைந்த அன்னை மரியா, கடுந்துன்பங்களை எதிர்கொள்ளும் ஏழைகளுக்காகத் இப்போது துயருறுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 15, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, புனித மரியாவின் துயரங்கள் திருவிழா அல்லது, தூய வியாகுல அன்னையின் திருவிழாவை மையப்படுத்தி, படைப்பின் காலம் (#SeasonOfCreation) என்ற ஹாஷ்டாக்குடன், தன் டுவிட்டர் செய்தியை, வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“வாளால் குத்தி ஊடுருவப்பட்ட இதயம் கொண்ட வியாகுல அன்னை, இயேசுவின் மரணத்தைக்கண்டு கடும்வேதனையுற்றார், அவர் இப்போது, இந்த உலகில் மனித சக்தியால், சிலுவையில் அறையுண்டுள்ள வறியோர் மற்றும், பயனற்றவை என்று ஒதுக்கப்பட்டுள்ள படைப்புயிர்கள் ஆகிய அனைவரின் துன்பங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மரியாவின் துயரங்கள் விழா வரலாறு

11ம் நூற்றாண்டில், துறவியர், குறிப்பாக, பெனடிக்ட் சபை துறவியர், அன்னை மரியாவின் துயரங்கள் பற்றி எழுதியதைத் தொடர்ந்து, 12ம் நூற்றாண்டில், அன்னை மரியாவின் துயரங்கள் பற்றிய பக்தி, பொதுமக்கள் மத்தியில், பல்வேறு பெயர்களில் பரவத் தொடங்கியது. பின்னர், 14 மற்றும், 15ம் நூற்றாண்டுகளில், இந்த பக்தியை, மரியின் ஊழியர் சபை துறவிகள் உலகம் முழுவதும் முன்னெடுத்துச் சென்றனர்.

1482ம் ஆண்டில், பரிவன்பு அன்னை மரியா என்ற பெயரில், இலத்தீன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டது. 1727ம் ஆண்டில், திருத்தந்தை 13ம் பெனடிக்ட் அவர்கள், இந்த விழாவை, குருத்தோலை ஞாயிறுக்குமுன்வரும் வெள்ளிக்கிழமைக்கு மாற்றினார். அன்னை மரியாவின் ஏழு துயரங்கள் நினைவாக, 1668ம் ஆண்டில், இந்த விழா, திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருவிழாவுக்கு அடுத்த நாளுக்கு மாற்றப்பட்டது.

திருத்தந்தை ஏழாம் பயஸ் (பத்திநாதர்) அவர்களை, பிரெஞ்ச் பேரரசர் நெப்போலியன், அரசியல் காரணமாக, 1808ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கைது செய்து, நாடு கடத்தி, சிறையில் அடைத்து துன்புறுத்தினார். 1814ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி விடுதலை செய்யப்பட்ட அந்த திருத்தந்தை, அவ்வாண்டு மே மாதம் 24ம் தேதியன்று உரோமைக்குத் திரும்பினார். சிறையில் தான் அனுபவித்த துயரங்கள் மற்றும், தான் நாடு கடத்தப்பட்டிருந்தபோது திருஅவை எதிர்கொண்ட வேதனை ஆகிய அனைத்தின் நினைவாக, இவர், வியாகுல அன்னை விழா, உலகம் முழுவதும் கொண்டாடப்படுமாறு, அவ்வாண்டு செப்டம்பர் 18ம் தேதி அறிவித்தார். இவ்வாறாக, இந்த விழா இலத்தீன் திருவழிபாட்டு நாள்காட்டியில், 1814ம் ஆண்டில் இணைக்கப்பட்டது. பின்னர், திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், இந்த விழா செப்டம்பர் 15ம் தேதி சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். 

15 September 2020, 13:42