தேடுதல்

Vatican News
திருச்சிலுவை திருச்சிலுவை  (AFP or licensors)

சிலுவை என்பது, இறையன்பின் மிக உன்னத நூல்

இறை அன்பின் வெளிப்பாடு நமக்கு மடத்தனமாக தோன்றலாம், ஆனால், ஒவ்வொரு தடவையும் நாம் சிலுவையை நோக்கும்போது, இந்த அன்பையே கண்டுகொள்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

திருச்சிலுவை மாட்சியுடன் உயர்த்தப்பட்ட விழா, செப்டம்பர் 14, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, சிலுவையின் அன்பை மையப்படுத்தி, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'இறையன்பின் வெளிப்பாடு நமக்கு மடமையாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் நாம் சிலுவையை நோக்கும்போது, இந்த அன்பை கண்டுகொள்கிறோம். சிலுவை என்பது, இறையன்பின் மிக உன்னத நூல்', என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

திருச்சிலுவை விழா

பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களின் தாய், புனித ஹெலெனா அவர்களின் முயற்சியால், நான்காம் நூற்றாண்டில், புனித பூமியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக, இயேசு அறையப்பட்டச் சிலுவை, 326ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, அதை, எருசலேமில், கட்டப்பட்ட புனிதக்கல்லறைக் கோவிலில் பீடமேற்றிய வரலாற்று நிகழ்வு, ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 14ம் தேதி, திருச்சிலுவை விழாவென கொண்டாடப்படுகிறது.

மேலும், இஞ்ஞாயிறன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் இரண்டு டுவிட்டர்களில், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த மன்னிப்பின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

கிரேக்க நாட்டிலுள்ள லெஸ்போஸ் தீவின் Moria புலம்பெயர்ந்தோர் முகாம் தீக்கிரையானதில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் அருகாமையையும் ஒருமைப்பாட்டையும் தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியின் வழியே வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட மூன்று டுவிட்டர் செய்திகளும், அவர் நண்பகல் மூவேளை செப உரையின்போது வெளியிட்ட கருத்துக்களையே மையம் கொண்டிருந்தன.

14 September 2020, 12:49