தேடுதல்

லெபனான், படைப்பின் காலம் லெபனான், படைப்பின் காலம் 

லெபனான், படைப்பின் காலம் - டுவிட்டர் செய்திகள்

"லெபனான் நாடு முழுமைக்கும், பெய்ரூட் நகருக்கும் இறைவேண்டல் செய்வோம். நாம் அவர்களுடன் நெருங்கியிருக்கிறோம் என்பதை, உறுதியான பிறரன்பு செயல்கள்வழியே உணர்த்துவோம்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 4, இவ்வெள்ளியை, லெபனான் நாட்டிற்காக இறைவேண்டலும், உண்ணாநோன்பும், மேற்கொள்ளும் உலக நாளாகக் கடைபிடிக்கும்படி, தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த விண்ணப்பத்தை மையப்படுத்தி, இவ்வெள்ளியன்று, தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

இந்த வாரம் நிகழ்ந்த புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், திருத்தந்தை, லெபனான் நாட்டின் கொடியை கரத்தில் ஏந்தியிருந்த வேளையில், அக்கொடியை முத்தமிட்ட காட்சி, இந்த டுவிட்டர் பதிவில், வெளியிடப்பட்டுள்ளது.

இயேசு சபையினரின் பணிகளில் ஒன்றான, திருத்தந்தையின் இறைவேண்டல் திருத்தூதுப் பணிக்குழு வெளியிட்டுள்ள இந்த டுவிட்டர் பதிவில், "லெபனான் நாடு முழுமைக்கும், பெய்ரூட் நகருக்கும் இறைவேண்டல் செய்வோம். நாம் அவர்களுடன் நெருங்கியிருக்கிறோம் என்பதை, உறுதியான பிறரன்பு செயல்கள்வழியே உணர்த்துவோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி முடிய சிறப்பிக்கப்பட்டு வரும் 'படைப்பின் காலம்' என்ற சிறப்பு இறைவேண்டல் காலத்தையொட்டி, திருத்தந்தை தன் 2வது டுவிட்டர் செய்தியை இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.

"நாம் சிறப்பிக்கும் இந்தப் 'படைப்பின் காலத்தில்', படைப்பின் காலச்சுழற்சிகள் மீது கவனம் செலுத்துவோம். இறைவனின் மகிமையை நமக்கு உணர்த்தவும், படைப்பின் அழகனைத்தையும் உருவாக்கிய ஆண்டவரைக் கண்டுகொள்ளவும், அவரிடம் திரும்பிச்செல்லவும், இவ்வுலகம் உருவாக்கப்பட்டுள்ளது" என்ற சொற்களை, #SeasonOfCreation, படைப்பின் காலம் என்ற ‘ஹாஷ்டாக்’குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2020, 12:15