தேடுதல்

நம் பொதுவான இல்லம் பற்றிய மீள்சிந்தனைக்கு அழைப்பு

எது நிரந்தரம், எது நிரந்தரமற்றது, எது முக்கியம், எது முக்கியமற்றது, எது தேவையானது, எது தேவையற்றது என்பதைக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து விலகி வாழ்வதற்கு, கொரோனா கொள்ளைநோய் நமக்கு அழைப்புவிடுக்கின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாடுகளின் அரசுகளும், அரசியல் தலைவர்களும், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும், ஒன்றுசேர்ந்து, ஒத்துழைப்பு வழங்குவது, சிறந்ததோர் வருங்காலத்தை அமைக்கும் இலக்கு நோக்கி முன்னோக்கிச் செல்ல உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் உரையாற்றினார்.

1945ம் ஆண்டு, சான் பிரான்செஸ்கோ நகரில், ஐக்கிய நாடுகள் நிறுவன அமைப்பின் ஆவணம் கையெழுத்திடப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் 193 உறுப்பு நாடுகளும் பங்குபெற்றுவரும், ஐ.நா.வின் மெய்நிகர் பொதுஅவையில், காணொளி வழியாக, செப்டம்பர் 25, இவ்வெள்ளி இந்தியநேரம் இரவு 7.30 மணியளவில்  உரையாற்றிய திருத்தந்தை, நம் பொதுவான இல்லம் பற்றிய மீள்சிந்தனைக்கு அழைப்புவிடுத்தார்.

ஐ.நா.விடம் திருத்தந்தை

அரசுகள், அரசியல், தூதரகங்கள், பன்னாட்டு அமைப்புகள் போன்ற அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஓர் இணக்கத்திற்கு வருதல், சீர்திருத்தங்கள், ஒத்துழைப்பு, மனித மாண்பு மதிக்கப்படல், அணு ஆயுதக்களைவு, மக்களின் புலம்பெயர்வு போன்ற பல்வேறு தலைப்புக்களில் இக்காணொளி வழியாக உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. நிறுவனத்திடம் திருப்பீடம் எதிர்பார்ப்பதை எடுத்துரைப்பதற்கு, இந்த 75ம் ஆண்டு நிறைவு நல்லதொரு தருணம் என்று குறிப்பிட்டார்.

ஐ.நா. நிறுவனம், முழு மனிதக் குடும்பத்திற்கும் பணியாற்றுவதில், நாடுகளுக்கிடையே ஒன்றிப்பின் அடையாளமாகவும், அதற்குச் சேவையாற்றும் ஒரு கருவியாகவும், விளங்கவேண்டும் என்று திருப்பீடம் ஆவல்கொள்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, உலகிற்கு முக்கியமானது எதுவோ, அதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று பரிந்துரைத்தார்.

முக்கியமானதைத் தெரிவு செய்ய...

உயிரைக்கொல்லும் கொரோனா கொள்ளைநோய் முன்வைத்துள்ள சவால்களை, உலகம் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், இந்த நெருக்கடி சூழல், நம் மனிதப் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும், நம் பொருளாதார, நலவாழ்வு மற்றும், சமுதாய அமைப்புக்கள் ஆகியவை பற்றி சிந்தித்துப்பார்க்க அழைப்பு விடுத்துள்ளது எனறும், திருத்தந்தை கூறினார்.

அதோடு, அடிப்படை நலவாழ்வு  பராமரிப்பைப் பெறுவதற்கு, ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உள்ளது என்பதை உணரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதையும், இந்த கொள்ளைநோய் நமக்கு சுட்டிக்காட்டுகிறது எனவும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

சோதனை காலத்தில், எது நிரந்தரம், எது நிரந்தரமற்றது, எது முக்கியம், எது முக்கியமற்றது, எது தேவையானது, எது தேவையற்றது என்பதைக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து விலகி வாழ்வதற்கு, கொரோனா கொள்ளைநோய் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்ற சிந்தனையை, கடந்த மார்ச் மாதம், சிறப்பு இறைவேண்டல் நிகழ்வில் தான் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய கடமையுணர்வு, ஒத்துழைப்பு, அமைதி, ஏழைகள் ஒதுக்கப்படாமை ஆகிய பாதைகளைத் தெரிவு செய்வதற்கு வலியுறுத்தினார்.

உண்மையான ஒருமைப்பாட்டுணர்வு

தோழமை உணர்வு என்பது, வெற்று வார்த்தைகள் அல்லது உறுதிப்பாடுகளோடு முடிந்துவிடக்கூடியது அல்ல, மாறாக, நம் இயல்பான வரையறைகளைக் கடந்துசெல்லும் எல்லாவிதச் சோதனைகளை தவிர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை, கோவிட்-19 உருவாக்கியுள்ள நெருக்கடிநிலை நமக்கு காட்டியுள்ளது என்று திருத்தந்தை கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய், தொழில் சந்தையில், ‘ரோபோ’ மற்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகரித்துள்ள இவ்வேளையில், மனிதரின் மாண்பு உறுதிசெய்யப்படும் சூழலில், அவர்களின் திறமைகள் உண்மையாகவே திருப்திபெறச் செய்யும் வகையில், தொழிலில் புதியமுறைகள் தேவைப்படுகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

வீணாக்கும் கலாச்சாரம்

மனித மாண்பை மதிக்காததே, வீணாக்கும் கலாச்சாரத்திற்கு ஆரம்பம் எனவும், மனிதரின் பல அடிப்படை உரிமைகள் மீறப்படுவது, வருங்கால நம்பிக்கை குறித்த மனித சமுதாயத்தின் எதிர்நோக்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும், கவலை தெரிவித்த திருத்தந்தை, சமய அடக்குமுறை, மனிதாபிமான நெருக்கடிகள், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதப் பயன்பாடு, மனிதர் நாட்டுக்குள்ளே புலம்பெயர்தல், மனித வர்த்தகம், கட்டாயத் தொழில், பெருமளவாக மக்கள் புலம்பெயர்தல் போன்றவற்றில் பல, பன்னாட்டளவில் புறக்கணிக்கப்படுகின்றன, இந்நிலை சகித்துக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டார்.

போர் வேண்டாம், அமைதி தேவை என்றும் கூறியுள்ள திருத்தந்தை, கோவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், குறிப்பாக சிறார் பற்றியும், இந்த கொள்ளைநோய் முடிந்தபின்னர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடுகளை ஒன்றுசேர்க்கும் நோக்கத்திற்காக ஐ.நா. நிறுவனம் உருவாக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலம் முன்வைக்கும் சவால்களை மாற்றுவதற்கு, ஐ.நா. நிறுவனம் பயன்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 கொள்ளைநோய் விதிமுறைகள் காரணமாக, ஐ.நா.வின் 75வது பொது அமர்வுக்கு, பல்வேறு உலகத் தலைவர்கள், காணொளிச் செய்திகளை ஏற்கனவே பதிவுசெய்து, அந்நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தனர். இந்தப் பொது அமர்வு, செப்டம்பர் 29ம் தேதி நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2020, 16:30