தேடுதல்

Vatican News
'ஒன்றிணைந்து ஓடுகிறோம்'  என்ற அமைப்பினர் சந்திப்பு 'ஒன்றிணைந்து ஓடுகிறோம்' என்ற அமைப்பினர் சந்திப்பு  (ANSA)

'ஒன்றிணைந்து ஓடுகிறோம்' வீரர்களுக்கு திருத்தந்தை நன்றி

செப்டம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் சந்தித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் பெர்கமோ நகரில், கோவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டோரைப் பராமரிக்கும், 'திருத்தந்தை 23ம் யோவான்' மருத்துவமனைக்கும், Brescia நகரிலுள்ள Poliambulanza அரசு-சாரா மருத்துவமனைக்கும், பல்வேறு நாடுகளின் இளம் விளையாட்டு வீரர்கள் ஆற்றிய உதவிக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'ஒன்றிணைந்து ஓடுகிறோம்' என்ற தலைப்பில், இளம் விளையாட்டு வீரர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்று, கடந்த மே மாதத்தில் நடைபெறவிருந்து, பின்னர், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, அது தள்ளிவைக்கப்பட்டது.

செப்டம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, பாப்பிறை கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ இரவாசி அவர்கள் தலைமையில், வத்திக்கானில் தன்னை சந்தித்த, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் குழு ஒன்றிற்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக, ஏற்பாடு செய்யப்பட்ட ஒருமைப்பாட்டுணர்வு ஏலம் என்ற நிகழ்விற்கு, விளையாட்டு வீரர்கள், தங்களுக்குச் சொந்தமான பல்வேறு விளையாட்டுக் கருவிகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களும், மற்ற வீரர்களும் விளையாட்டிற்குக் கொணரும் அதே அளவிலான மதிப்பையே, 'ஒன்றிணைந்து ஓடுகிறோம்' என்ற இந்த விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கொண்டு வருகின்றனர் என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மனித மாண்பை ஊக்குவிப்பதற்காக நாம் தொடர்ந்து ஓடுகிறோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

உடன்பிறந்த உணர்வுடன் நிகழும் விளையாட்டு, காயங்களைக் குணப்படுத்தவும், உறவுப் பாலங்களை அமைக்கவும், சமுதாய நட்பை வளர்க்கவும் சக்தியைக் கொண்டது, இது இளைஞர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக உள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.

ஒன்றிணைந்து ஓடுகிறோம்' என்ற இந்நிகழ்வை, வத்திக்கானின் விளையாட்டு கழகமும், இத்தாலியின் சில விளையாட்டு குழுக்களும் இணைந்து ஏற்பாடு செய்தன. இந்த ஓட்டத்தில், ஒலிம்பிக் வீரர்களுடன், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகள், சிறைக்கைதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து ஓடினர்.

05 September 2020, 14:14