தேடுதல்

Vatican News
லொரேட்டோ மரியன்னை  திருத்தலத்தில் இத்தாலிய அரசுத்தலைவர் லொரேட்டோ மரியன்னை திருத்தலத்தில் இத்தாலிய அரசுத்தலைவர்   (ANSA)

குடும்பங்களுக்காக இணைய வழி திருப்பயணம்

திருத்தந்தை : விசுவாசம் மற்றும் ஒருமைப்பாட்டின் சான்றாக இடம்பெறும் இணைய வழி திருப்பயணம், மக்களுக்கு நம்பிக்கையையும், முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான வலிமையையும் வழங்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும் இத்தாலியின் பொம்பெய், மற்றும், லொரேட்டோ திருத்தலங்களுக்கு, 'குடும்பங்களுக்காக குடும்பங்கள்' என்ற கருத்துடன் இடம்பெறும் திருப்பயணத்தையொட்டி, இவ்வாண்டு நிகழ்வுக்கு, தன் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

13வது ஆண்டாக இடம்பெறும் இந்த திருப்பயணமும், சந்திப்பும், கோவிட் கொள்ளைநோய் அச்சம் காரணமாக, இணைய வழி இடம்பெறுவதையொட்டி, திருத்தந்தையின் பெயரால், இத்தாலிய ஆயர் பேரவை பொதுச்செயலர், ஆயர் Stefano Russo அவர்களுக்கு, செய்தியை அனுப்பியுள்ள திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ‘மகிழ்ச்சியோடிருங்கள், ஒருவருக்கொருவர் துணிவுடன் நெருக்கமாயிருங்கள், ஒரே உணர்வைக் கொண்டிருங்கள்' என்ற புனித பவுலின் சொற்களால், திருத்தந்தை, திருப்பயணிகளை வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

கொள்ளைநோயால் உலகம் துன்புற்றுவரும் இன்றையச் சூழலில், நம்பிக்கை மற்றும் ஒருமைப்பாட்டின் சான்றாக இடம்பெறும் இந்த இணைய வழி திருப்பயணமும், கூட்டமும், மக்களுக்கு நம்பிக்கையையும், முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான வலிமையையும் வழங்க வேண்டுமென திருத்தந்தை வாழ்த்துவதாக இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இளையோரின் நலவாழ்வும், வளர்ச்சியும், சமுதாயத்தின் அமைதி வாழ்வுக்கும், வருங்காலத்திற்கும், இன்றியமையாதவை என்பதை மனதில் கொண்டதாக, இந்த கல்வியாண்டின் துவக்க காலத்தில், அனைவரும், பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும் எனவும், திருத்தந்தையின் செய்தி அழைப்பு விடுக்கிறது.

இத்தாலியிலும், ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவக் குடும்பங்கள், வாழ்வு, எதிர்நோக்கு, நம்பிக்கை, மற்றும், அன்பை பரப்புவோராக செயல்பட, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவதாகக் கூறி, திருத்தந்தையின் செய்தியை நிறைவு செய்துள்ளார், திருப்பீடச்செயலர் கர்தினால் பரோலின்.

14 September 2020, 12:57