தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் - கோப்புப் படம் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் - கோப்புப் படம் 

ஐ.நா. நிறுவனத்தின் உயர்மட்ட கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி

"நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையை வியந்து நோக்குவதற்குப் பதில், விழுங்கி வருகிறோம். நமது உள்ளங்கள் நோயுறாமல் இருக்க அமைதியை நாம் கண்டுணர வேண்டும்" - திருத்தந்தையின் டுவிட்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

படைக்கப்பட்ட உலகை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, ஒரு சிறந்த வழி, படைக்கப்பட்ட உலகை ஆழ்ந்து தியானிப்பதே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 16, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையில் கூறிய கருத்தை, செப்டம்பர் 17, இவ்வியாழனன்று, டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் மாத ஆரம்பம் முதல், 'படைப்பின் காலம்' என்ற 'ஹாஷ்டாக்'குடன் செய்திகளை வெளியிட்டு வரும் திருத்தந்தை, இவ்வியாழனன்றும் மற்றொரு டுவிட்டர் செய்தியை, அதே 'ஹாஷ்டாக்'குடன் வெளியிட்டுள்ளார்.

"நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையை வியந்து நோக்குவதற்குப் பதில், விழுங்கி வருகிறோம். பொருளற்ற பல வேடிக்கைகளால் திசைதிருப்பப்படாமல் இருக்க, நாம் மீண்டும் ஆழ்நிலை தியானம் செய்யும் பழக்கத்திற்கு திரும்பவேண்டும். நமது உள்ளங்கள் நோயுறாமல் இருக்க, அமைதியை நாம் கண்டுணரவேண்டும்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, தன் 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும்வண்ணம், செப்டம்பர் 22, வருகிற செவ்வாயன்று துவங்கும் உயர்மட்ட கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை அனுப்புவார் என்று, வத்திக்கான் செய்தித்துறையின் தலைவர், திருவாளர் மத்தேயோ புரூனி அவர்கள், செப்டம்பர் 16, இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

2015ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியன்று ஐ.நா. நிறுவனத்தின் பொது அவையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவண்ணம், இந்தக் கொள்ளைநோயினால் துன்புறும் உலகில், போர் நிறுத்தம் நடைபெறவும், வறிய நாடுகளின் கடன்கள் நீக்கப்படவும், ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உலகத் தலைவர்களிடம் விண்ணப்பித்திருப்பதும் நினைவில் கொள்ளத்தக்கன.

17 September 2020, 14:09