தேடுதல்

Corinaldo இரவு கேளிக்கை அரங்கில் பலியானவர்களுக்கு அஞ்சலி Corinaldo இரவு கேளிக்கை அரங்கில் பலியானவர்களுக்கு அஞ்சலி  

துயர்நிறைந்த இறப்புக்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரும் வேதனை

2018ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, இத்தாலியின் Corinaldo நகரில் அமைந்துள்ள இரவு கேளிக்கை அரங்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், கூட்ட நெருசலில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும், 59 பேர் காயமுற்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இரு ஆண்டுகளுக்குமுன், இத்தாலி நாட்டில், இரவு கேளிக்கை அரங்கு ஒன்றில் இடம்பெற்ற விபத்தில், பலியான இளம் தாய் மற்றும், வளர்இளம்பருவத்தினரின் குடும்பத்தினரை, செப்டம்பர் 12, இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானில் சந்தித்து தனது ஆறுதலையும் செபங்களையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

துயர்நிறைந்த இறப்புக்கள் ஒவ்வொன்றும், குறிப்பாக, இளம் தாய் மற்றும், வளர்இளம் பருவத்தினரின் இறப்புக்கள், மிகுந்த வேதனையளிக்கிறது, அதேநேரம், இந்த விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த காரணங்களை அறிய முற்படவில்லை, ஆயினும், உங்களின் துன்பங்களோடும், நீதிகேட்கும் உங்களின் நியாயமான ஆசைகளோடும் நானும் ஒன்றித்திருக்கிறேன் என்று, திருத்தந்தை, இச்சந்திப்பில் எடுத்துரைத்தார்.

இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டபோது, தனக்கு அது அதிர்ச்சியளித்தது, உலகில், துயர்நிறைந்த பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன, அவை நாள்கள் செல்லச் செல்ல மறக்கப்பட்டு விடுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, கடுந்துயர்களை எதிர்கொள்ளும் அனைவரையும் திருத்தந்தையும், திருஅவையும் மறக்கவில்லை என்பதை, இந்த சந்திப்பு நினைவுபடுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

லொரேத்தோ அன்னை மரியா திருத்தலம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, இதில் இறந்தவர்கள் மற்றும், காயமடைந்தவர்களை, அன்னை மரியாவின் அரவணைப்பில் அர்ப்பணிப்பதாகவும், அன்னை மரியா, அவர்களுடன் எப்போதும் துணையாக உள்ளார் எனவும், திருத்தந்தை கூறினார்.

இறுதியாக, அந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் பெயர்களைச் சொல்லி, அவர்களின் ஆன்மா இறைவனில் என்றென்றும் இளைப்பாறுமாறு செபித்து, இந்த சந்திப்பை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2018ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, இத்தாலியின் Corinaldo நகரில் அமைந்துள்ள இரவு கேளிக்கை அரங்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்,  கூட்ட நெரிசலில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும், 59 பேர் காயமுற்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2020, 13:53