தேடுதல்

"இன்னும் பிறக்காதவர்களின் குரல்" என்ற ஆலயமணியை ஆசீர்வதித்து ஒலிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் "இன்னும் பிறக்காதவர்களின் குரல்" என்ற ஆலயமணியை ஆசீர்வதித்து ஒலிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

"இன்னும் பிறக்காதவர்களின் குரல்" – ஆலயமணிக்கு ஆசீர்

மனித வாழ்வுக்கு முழு சம்மதம் என்று பொருள்படும் "Yes to Life" என்ற அறக்கட்டளை உருவாக்கியிருந்த ஆலய மணி ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் ஆசீர்வதித்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித வாழ்வு ஒரு கொடை என்பதையும், மனிதர்கள் சார்ந்த சுற்றுச்சூழலை அழிப்பது ஆபத்தானது என்ற கருத்தையும் வலியுறுத்தி, செப்டம்பர் 24, இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

"மனிதர் சார்ந்த சுற்றுச்சூழலின் அழிவு மிகவும் ஆபத்தானது, இவ்வுலகை இறைவன் நம்மிடம் ஒப்படைத்துள்ளார் என்பதால் மட்டுமல்ல, மனித வாழ்வு ஒரு கொடை என்பதால், அதைக் காப்பது நம் கடமை" என்ற சொற்கள், #SeasonOfCreation என்ற 'ஹாஷ்டாக்'குடன் திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், மனித வாழ்வுக்கு சம்மதம் என்று பொருள்படும் "Yes to Life" என்ற அறக்கட்டளை உருவாக்கியிருந்த ஆலய மணி ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் ஆசீர்வதித்தார்.

போலந்து நாட்டிலிருந்து வந்திருந்த "Yes to Life" என்ற அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள், "இன்னும் பிறக்காதவர்களின் குரல்" என்ற பெயரில் உருவாக்கியிருந்த இந்த ஆலயமணியை ஆசீர்வதித்து, அதனை முதன் முதலாக, வத்திக்கான் புனித தமாசோ வளாகத்தில் ஒலிக்கச் செய்த திருத்தந்தை, கருவில் உள்ள உயிர்கள் குறித்து உலகத் தலைவர்கள் அக்கறை காட்டவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

போலந்து நாட்டு மக்கள் மற்றும் அந்நாட்டில் சட்டங்களை உருவாக்குவோர் அனைவரின் மனசாட்சிகளை, இந்த மணியின் ஓசை, விழித்தெழ செய்யவேண்டும் என்றும், அனைத்து உயிர்களையும் வழங்கும் இறைவன், போலந்து நாட்டு மக்களையும், உலக மக்களையும் ஆசீர்வதிக்கவேண்டும் என்றும் செபித்து, திருத்தந்தை இந்த மணியை ஒலித்தார்.

நான்கு அடி விட்டம் அளவு கொண்ட இந்த வெண்கல மணி, போலந்து நாட்டின் வார்சா நகரில், மனித வாழ்வை ஆதரித்து அக்டோபர் மாதம் நடைபெறும் பேரணியில் ஒலிக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து, இந்த மணி, Kolbuszowa என்ற ஊரில் உள்ள அனைத்து புனிதர்கள் பங்குக்கோவிலில் நிறுவப்படும் என்றும் CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2020, 14:27