தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது - 020920 புதன் மறைக்கல்வியுரையின்போது - 020920 

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: ஒருமைப்பாடு எனும் நற்பண்பு

கோவிட் நோயிலிருந்து மீண்டுவரும் உலகில், ஒருமைப்பாட்டுணர்வை கண்டுகொள்ள தேவையான ஞானத்தையும், படைப்பாற்றலையும் தூய ஆவியார் வழங்குவாராக

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜூலை மாத கோடை விடுமுறைக்குப்பின், ஆகஸ்ட் மாதத்தில் தன் புதன் மறைக்கல்வியுரையில், தற்போதைய கொள்ளைநோய், இவ்வுலகில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்து தன் சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளத் துவங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 2ம் தேதி, இப்புதனன்று, இக்காலத்தில், நம்மிடையே விளங்கவேண்டிய ஒருமைப்பாட்டின் அவசியம் குறித்து எடுத்தியம்பினார்.

மார்ச் 7ம் தேதியன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில், வழங்கிய புதன் மறைக்கல்வியுரையின்போது, விசுவாசிகளை நேரடியாக சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோயின் கட்டுப்பாட்டுகளையொட்டி, தன் நூலகத்திலிருந்தே அதன் பின், மறைக்கல்வி உரைகளை, காணொளி வழியாக வழங்கிக் கொண்டிருந்தார். தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இப்புதனன்று, அதாவது, 189 நாட்களுக்குப்பின், வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (San Damaso) வளாகத்தில், முதன் முறையாக, திருப்பயணிகளை நேரடியாக சந்தித்த திருத்தந்தை, தன் எண்ணங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டார்.

அன்பு சகோதரர், சகோதரிகளே, தற்போதைய கொள்ளைநோய் குறித்த நம் சிந்தனைப் பகிர்வுகளில், இறைவனால் படைக்கப்பட்ட, பொதுவான இல்லத்தை, பகிர்ந்து வாழ்ந்துவரும் நாம், எவ்வாறு ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதையும், எவ்வாறு இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதையும்  குறித்து கடந்த வாரங்களில் கண்டோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால்தான், இன்றைய நெருக்கடிச் சூழல்களிலிருந்து வலிமையுடன் வெளியேறமுடியும். இவ்வாறே, ஒருமைப்பாடு எனும் நற்பண்பு குறித்து, திருஅவையின் சமூகக்கோட்பாடும் எடுத்துரைக்கிறது. உண்மை ஒருமைப்பாடு என்பது, மற்றவர்களுக்கு உதவியை வழங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. மாறாக, அது, நீதியோடு தொடர்புடையது. சமூக நலன் குறித்த நம் எண்ண ஓட்டத்தில் மிகப்பெரும் மாற்றத்தை இது எதிர்பார்க்கிறது. மேலும், இது அனைவரின் வாழும் உரிமையை பாதுகாப்பதோடு, உலகின் பொருட்களை நீதியுடன் அனைவரோடும் பகிர்வதை ஊக்குவிப்பதாகும். பாபேல் கோபுரம் குறித்த விவிலிய நிகழ்வு நமக்கு இதனை அழகாக எடுத்துரைக்கிறது. கடவுளைக் கைவிட்ட ஒரு சமுதாயம், ஏழைகளுடன் ஒருமைப்பாட்டை இழந்து, உறவுகளைவிட பொருட்களை பெரிதாக மதித்து, தன் வழியில், வானத்தை நோக்கிய ஒரு பாதையைக் கட்டியெழுப்ப முயலும்போது, என்ன நடக்கும் என்பதை பாபேல் கோபுர நிகழ்வில் காண்கிறோம். அழிவு தரும் இந்த பாபேல் நோய்க்குறி, பெந்தகொஸ்தே நிகழ்வால் மாற்றப்படுவதையும் காண்கிறோம். பெந்தகொஸ்தே நிகழ்வின்போது, சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கென, பன்மைத்தன்மையில் இணக்கமான ஒன்றிப்பை தூய ஆவியாரின் கொடை உருவாக்கியதையும் காண்கிறோம். கோவிட் நோய்க்காலத்திலிருந்து மீண்டுவரும் உலகில், இத்தகைய ஒருமைப்பாட்டுணர்வை கண்டுகொள்ள தேவையான ஞானத்தையும், படைப்பாற்றலையும் தூய ஆவியார் நமக்கு வழங்குவாராக. இதன் வழியாக நாம் சமூகத் தீமைகளையும், நமக்கிடையே காணப்படும் தீமைகளையும், குணப்படுத்தவும், மனிதகுல குடும்பம் சகோதரத்துவத்திலும், நீதியிலும், அமைதியிலும் வளரவும் உதவுவோமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர், மற்றும், நோயுற்றோருக்காக செபித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

02 September 2020, 12:18