தேடுதல்

Vatican News
புனித தமாசோ திறந்தவெளி அரங்கில் மக்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் புனித தமாசோ திறந்தவெளி அரங்கில் மக்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

தாக்குதல்களிலிருந்து கல்வியை காக்கவேண்டும் - திருத்தந்தை

போர்கள் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களால் கல்வி உரிமையை கடுமையாக இழந்துள்ள மாணவர்களுக்காக செபிக்கும்படி உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் - திருத்தந்தையின் விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 9ம் தேதியை, தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாக்கும் உலக நாளாக முதல்முறை கொண்டாட ஐக்கிய நாடுகள் நிறுவனம், தீர்மானித்துள்ளதை மனதில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், இந்த உலக நாளுக்கென தனிப்பட்ட விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கல்வியைப் பாதுகாக்கும் உலக நாள்

தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாக்கும் உலக நாளை முதல்முறை நாம் சிறப்பிக்கும் இவ்வேளையில், போர்கள் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களால் கல்வி உரிமையை கடுமையாக இழந்துள்ள மாணவர்களுக்காக செபிக்கும்படி உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் என்று திருத்தந்தை இவ்விண்ணப்பத்தின் ஆரம்பத்தில் கூறினார்.

இளம் மாணவர்கள் தங்கியிருக்கும் கட்டடங்களை மதிக்கவும், காப்பாற்றவும் உலக சமுதாயம் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், பாதுகாப்பானச் சூழல்களில் இளம் தலைமுறையினர் தங்கள் கல்வியைத் தொடர பன்னாட்டு அமைப்புக்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் விண்ணப்பத்தில் வலியுறுத்தியுள்ளார்.

உங்களுக்குத் தெரியுமா?

கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், 22,000த்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விக்கூட உழைப்பாளர்கள் காயமுற்றுள்ளனர், மற்றும் இறந்துள்ளனர்.

2015ம் ஆண்டுக்கும் 2019ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 93 நாடுகளில், கல்வியில் ஈடுபட்டுள்ளார் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், காமரூன் மற்றும் பாலஸ்தீனா ஆகியவை, பெருமளவு தாக்குதல்களைச் சந்தித்துள்ளன.

2015ம் ஆண்டுக்கும் 2019ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 34 நாடுகளில், பள்ளிகளும், கல்லூரிகளும், இராணுவத்தாரால், ஆயுதக்கிடங்காக, எதிரிகளை அடைத்து வைக்கும் சிறையாக, பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகள், 17 நாடுகளில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். (ஆதாரம்: Education under Attack 2020)

09 September 2020, 14:26