தேடுதல்

மூவேளை செப உரையின்போது - 130920 மூவேளை செப உரையின்போது - 130920 

மன்னிப்பின் சக்திக்கு நம் இதயங்கள் திறக்கப்படவேண்டும்

திருத்தந்தை : நாம் பிறரை மன்னிக்கவும், அன்புகூரவும் மறுத்தால், நாமும் இறைவனின் மன்னிப்பையும் அன்பையும் எதிர்பார்க்க முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

தன்னிடம் கடன்பட்ட ஊழியனை மன்னித்த அரசன் பற்றியும், மன்னிப்புப்பெற்ற ஊழியன் தன்னிடம் கடன்பட்டவரை மன்னிக்க மறுத்தது குறித்தும் விவரிக்கும் இயேசுவின் உவமையை மையப்படுத்தி, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும் மன்னிக்க மறுத்த பணியாள் உவமை (மத். 18:21-35), குறித்து, தன் மூவேளை செப உரையில், எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்ற சொற்களை இருவரின் வாயிலிருந்து இந்த உவமையில் கேட்கிறோம், ஒருவர் இவ்விண்ணப்பத்தை முன்வைத்து மன்னிப்பைப் பெறுகிறார், இன்னொருவர் மன்னிப்புப் பெற்றவராலேயே மன்னிப்பு மறுக்கப்படுகிறார், என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மிகப்பெரிய அளவு கடன் மன்னிக்கப்பட்டவர், தன்னிடம் கடன்பட்டவரின் சிறிய அளவு கடனை மன்னிக்க மறுத்து அவரை சிறைக்கு அனுப்பினார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிக்கப்பட்டவர் மன்னிக்க மறுத்ததைத் தெரியவந்த மன்னர், அந்த ஊழியனை தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கியதைப்பற்றி குறிப்பிட்டார்.

இறைவனும் மனிதனும்

இந்த உவமையில் நாம், அரசனின் வடிவில் இறைவனையும், மன்னிக்க மறுத்த ஊழியனின் வடிவில் மனிதனையும் காண்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் நடவடிக்கையில், நீதி, இரக்கத்தால் மேற்கொள்ளப்படுவதை நாம் காண்கிறோம், ஆனால், மனிதனின் நடவடிக்கையில், நீதியென்ற எல்லைக்குள் மன்னிப்பு சுருங்கிவிடுகிறது என எடுத்துரைத்தார்.

வாழ்வின் செயல்பாடுகள் அனைத்திற்கும் நீதியால் மட்டும் தீர்வு காணமுடியாது என்பதால், மன்னிப்பின் சக்திக்கு நம் இதயங்கள் திறக்கப்படவேண்டும் என இயேசு எதிர்பார்க்கிறார், ஏனெனில், இன்றைய உலகில் இரக்கத்தின் நிறைவான அன்பு அதிகம் அதிகமாக தேவைப்படுகின்றது, என்பதை வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எப்போதும்  மன்னிப்பை வழங்க...

புனித பேதுருவின் கேள்விக்கு இயேசு, 'எழுபது தடவை ஏழுமுறை' என்று பதில் வழங்கியது, நாம் எப்போதும் மன்னிப்பை வழங்க அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது எனக் கூறிய திருத்தந்தை, நம் வாழ்க்கை முறையாக, மன்னிப்பும் இரக்கமும் இருந்தால், எத்தனையோ மோதல்களும், போர்களும், வேதனைகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என கூறினார்.

தம்பதியரிடையேயும், பெற்றோர் பிள்ளைகளிடையிலும், சமுதாயத்திலும், அரசியலிலும், அனைத்து மனித உறவுகளிலும், இரக்கத்தின் அன்பை செயல்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மன்னிக்க அழைக்கும் செபம்

நாம் சொல்லும் "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்ற செபத்தில், "எங்களுக்குத் எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதுபோல், எங்கள் குற்றங்களை மன்னியும்" என்ற சொற்களின் பொருளை நாம் முற்றிலும் உணரவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பிறரை மன்னிக்கவும், அன்புகூரவும் மறுத்தால், நாமும், இறைவனின் மன்னிப்பையும், அன்பையும், எதிர்பார்க்க முடியாது என மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2020, 12:52