தேடுதல்

மூவேளை செபவுரை - 270920 மூவேளை செபவுரை - 270920 

தீமைகளை அல்ல, நன்மைகளையே தேர்தல்

கிறிஸ்தவ வாழ்வு என்பது, கனவுகளாலோ, அழகான ஏக்கங்களாலோ நிறைந்ததல்ல, மாறாக ,நம் உறுதியான நடவடிக்கைகளாலும், இறைவிருப்பத்தை நிறைவேற்ற திறந்தமனம் கொண்டிருப்பதாலும், நம் சகோதரர் சகோதரிகளை அன்பு கூர்வதாலும் நிறைந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ வாழ்வு என்பது, கனவுகளாலோ, அழகான ஏக்கங்களாலோ நிறைந்ததல்ல, மாறாக ,நம் உறுதியான நடவடிக்கைகளாலும், இறைவிருப்பத்தை நிறைவேற்ற திறந்தமனம் கொண்டிருப்பதாலும், நம் சகோதரர் சகோதரிகளை அன்பு கூர்வதாலும் நிறைந்துள்ளது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்டுள்ள இரு புதல்வர் உவமையை (மத் 21: 28-32) மையமாக வைத்து, தன் நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போகமாட்டேன் என கூறிவிட்டு, பின்னர் சென்ற மகனையும், போகிறேன் என கூறிவிட்டு போகாமல் இருந்த மகனையும் நோக்கும்போது, கீழ்ப்படிதல் என்பது, 'ஆம்', 'இல்லை' என்று சொல்வதில் அல்ல, மாறாக, சொல்வதை செயல்படுத்துவதில் அமைந்துள்ளது என அறிகிறோம் என்று கூறினார்.

வெளிப்புற அடையாளங்களால் நிறைந்ததல்ல கிறிஸ்தவம்

வெளிப்புற அடையாளங்களால் மட்டும் நிறைந்துள்ள ஒரு மதத்தை தாண்டி, வெளியேச் சென்று, மக்களை அன்புகூர்ந்து அவர்களுக்கு பணியாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

பாவிகள் என நோக்கப்பட்ட, வரி தண்டுவோரும் விலைமகளிரும் முதலில் இறைவனின் குரலுக்கு செவிமடுக்கவில்லை எனினும், பின்னர் தங்கள் பாவங்களை உணர்ந்து மனம் திரும்பியதால்,  தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்களாகவும், இறையாட்சிக்கு முதலில் உட்படுபவர்களாகவும் உள்ளனர் என இவ்வுவமையின் வழியாக இயேசு எடுத்துரைப்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கடவுள் பொறுமையுள்ளவர்

நாமும் மனம் திரும்பவேண்டும் என் கடவுள் எதிர்பார்க்கிறார், அதேவேளை நமக்காக பொறுமையுடன் காத்திருக்கிறார், ஏனெனில், நாம் 'இல்லை' என்று சொன்னாலும் அவர் சோர்ந்து போவதில்லை, நாம் தவறுகளே இழைத்தாலும் நாம் திரும்பிவர காத்திருக்கிறார், என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அளவற்ற கருணையால் நம்மை நிரப்பும் நோக்கத்தில் அவரது கரங்கள் எப்போதும் நமக்காக திறந்தேயிருக்கும் எனவும் எடுத்துரைத்தார்.

தீமைகளைவிட, நன்மையையும், பொய்களைவிட உண்மையையும், சுயநலத்தைவிட அடுத்தவர்மீது  அன்பையும் நம் விசுவாசம் எதிர்பார்க்கிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோர், இறையரசுக்குள் முதலில் நுழைவர் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2020, 13:14