தேடுதல்

Vatican News
European House - Ambrosetti கருத்தரங்கு European House - Ambrosetti கருத்தரங்கு  (ANSA)

European House - Ambrosetti கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி

'பொருளாதாரம்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லான oeconomia, அதாவது, உலகம் என்ற நம் இல்லத்தைப் பேணிக்காத்தல், என்ற சொல்லின் ஆழமான பொருளை நாம் உணர்ந்துள்ளோம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நலவாழ்வு, பொருளாதாரம், சமுதாயம் என்ற மூன்று நிலைகளிலும் நெருக்கடியை சந்தித்துவரும் இன்றைய காலத்தில், சமுதாயம், பொருளாதாரம் மற்றும் புதிய முயற்சிகள் என்ற மூன்று கருத்தையும் சிந்திக்க கூடியிருக்கும் ஐரோப்பிய கருத்தரங்கு ஒன்றுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியை அனுப்பியுள்ளார்.

இத்தாலியின் வடபகுதியில் அமைந்துள்ள Cernobbio நகரில் செப்டம்பர் 4,5,6 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறும் European House - Ambrosetti என்ற கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியின் துவக்கத்தில், உலகெங்கும் பரவியுள்ள கொள்ளைநோய், நம்மில் எவரும் தனியே நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதை உணர்த்தியுள்ளது என்ற எண்ணத்தை கூறியுள்ளார்.

நமது சக்தியற்ற நிலையை வெளிச்சமிட்டுக் காட்டி, நாம் அனைவருமே ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை, உலகெங்கும் பரவியுள்ள ஒரு கிருமி நமக்கு உணர்த்தியுள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் என்ற இல்லத்தைப் பேணிக்காத்தல்

இத்தகையைச் சூழலில், economics அதாவது, 'பொருளாதாரம்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லான oeconomia, அதாவது, உலகம் என்ற நம் இல்லத்தைப் பேணிக்காத்தல், என்ற சொல்லின் ஆழமான பொருளை நாம் உணர்ந்துள்ளோம், அதன் முக்கியத்துவத்தையும் நாம் புரிந்துகொண்டுள்ளோம் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பேணிக்காத்தல் என்பது, இவ்வுலகையும், அதில் வாழும் அனைவரையும் எவ்வித பாகுபாடோ, புறக்கணிப்போ இன்றி காப்பது என்பதை உணரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

செல்வம், பொருள் ஆகிய போலி தெய்வங்கள்

மனிதர்களைப் புறந்தள்ளி, செல்வம், பொருள் ஆகிய போலி தெய்வங்களுக்கு முன் மனித மாண்பு பலியாவதால், ஏற்றத்தாழ்வுகளும், அதன் விளைவாக, வன்முறைகளும் பெருகி வருகின்றன என்ற கவலையை, திருத்தந்தையின் செய்தி வெளிப்படுத்துகிறது.

மனிதகுலம் சந்தித்துவரும் இந்த நெருக்கடிக்கு, அறிவியலும், தொழிநுட்பங்களும் மட்டும் தேவையான தீர்வுகளைத் தராது என்பதை உணர்ந்துள்ள நாம், இவ்வேளையில், உதவவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், உலகெங்கும், பலர் காட்டியுள்ள தாராள மனம், ஓரளவு தீர்வுகளைத் தந்திருப்பது, மனதுக்கு நிறைவைத் தருகிறது என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற கருத்து

ஐரோப்பிய ஒன்றியம் என்ற கருத்துக்கு 1950ம் ஆண்டு அடித்தளமிட்ட Schuman அறிக்கை உருவாக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் சென்று கூடியுள்ள நீங்கள், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள், உலக நாடுகளுக்கு எவ்வகையில் வழிகாட்டிகளாக இருக்க இயலும் என்பதைச் சிந்திக்கவேண்டும் என்று, திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார்.

வருங்காலத்தைக் குறித்து சிந்திக்க கூடியிருக்கும் நீங்கள், பொருளாதாரம், முன்னேற்றம் என்ற கருத்துக்களை இன்னும் புதிய கண்ணோட்டங்களில் காணவும், யாரையும் ஒதுக்கிவிடாமல், யாரையும் விளிம்புகளுக்குத் தள்ளாமல், புதியதொரு சமுதாயத்தை உருவாக்கும் கருத்துக்களைச் சிந்திக்க கேட்டுக்கொள்கிறேன் என்று இச்செய்தியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

"எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!" (தி.பா. 90:17) என்ற திருப்பாடலின் வேண்டுதலை, கருத்தரங்கில் பங்கேற்போர் அனைவருக்கும் தன் வேண்டுதலாகக் கூறி, திருத்தந்தை இச்செய்தியை நிறைவு செய்துள்ளார்.

04 September 2020, 12:29