தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் நோயுற்றோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் நோயுற்றோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (Vatican Media)

மக்கள் சந்திப்பு, தலைமைப்பணியின் முக்கியப் பகுதியாக...

இவ்வாண்டு பிப்ரவரி 26ம் தேதி திருநீற்றுப் புதனன்று, மக்களை, புனித பேதுரு வளாகத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சரியாக 189 நாள்களுக்குப் பின், மீண்டும் மக்களைச் சந்தித்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, மக்கள் சந்திப்பு என்ற மகிழ்வான அனுபவத்தை துறந்து, நோன்பு போன்ற ஓர் அனுபவத்தை கடைபிடித்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும், செப்டம்பர் 2ம் தேதி, வத்திக்கானில் உள்ள புனித தமாசோ திறந்த வெளியரங்கில் மக்களைச் சந்தித்தார் என்று, வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி 26ம் தேதி திருநீற்றுப் புதனன்று, மக்களை, புனித பேதுரு வளாகத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சரியாக 189 நாள்களுக்குப் பின், மீண்டும் மக்களைச் சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் பாப்பிறை இல்லத்தின் நூலக அறையிலிருந்து தன் மறைக்கல்வி உரைகளை வழங்கிவந்தார்.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலும், புனித 6ம் பவுல் அரங்கத்திலும் தன் மறைக்கல்வி உரைகளை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட் 19 கொள்ளைநோய் நெருக்கடியால், மார்ச் 11ம் தேதி முதல், தன் மறைக்கல்வி உரைகளை, பாப்பிறை இல்லத்தின் நூலக அறையிலிருந்து, நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிவந்தார்.

மக்கள் சந்திப்பை, தன் தலைமைப்பணியின் ஒரு முக்கியப் பகுதியாகக் கொண்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த சந்திப்பிற்கு உதவியாக, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் காலை ஏழுமணிக்கு நிறைவேற்றும் திருப்பலியிலும், புதன் மறைக்கல்வி உரைகளிலும் மக்களைச் சந்தித்து வந்தார்.

புனித பேதுரு வளாகத்திலும், புனித 6ம் பவுல் அரங்கத்திலும் திருத்தந்தை வழங்கிவந்த மறைக்கல்வி உரைகளின் ஒரு முக்கிய நிகழ்வாக, பல்வேறு குழுவினரை, குறிப்பாக, நோயுற்றோரைச் சந்திப்பது நிகழ்ந்து வந்தன.

Neurofibromatosis என்றழைக்கப்படும் நரம்பு மற்றும் தசை மண்டலங்களின் குறைப்பாட்டினால், முகத்தோற்றத்தில் வெகுவாக மாறுபட்டிருந்த Vinicio Riva என்பவர், 2013ம் ஆண்டு, நவம்பர் 6ம் தேதி, புனித பேதுரு வளாகத்தில் புதன் மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள வந்திருந்தபோது, அவரைச் சந்தித்து, திருத்தந்தை வழங்கிய அரவணைப்பும், ஆசீரும், உலகெங்கும் ஊடகங்களால் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு மென்மையான தருணமாக அமைந்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மறைக்கல்வி உரையைக் கேட்க, கிறிஸ்தவர்கள் அல்லாமல், ஏனைய மதத்தவரும் பல்வேறு நாடுகளிலிருந்து வருவதைக் காண முடிகிறது. மக்களைச் சந்திப்பது, திருத்தந்தையின், புதன் சந்திப்பின் ஒரு முக்கிய நிகழ்வாக, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

03 September 2020, 14:58