தேடுதல்

லெபனான் நாட்டுக் கொடியைப் பற்றியபடி திருத்தந்தையின் இறைவேண்டல் லெபனான் நாட்டுக் கொடியைப் பற்றியபடி திருத்தந்தையின் இறைவேண்டல் 

செப்டம்பர் 4 - லெபனான் நாட்டிற்காக இறைவேண்டல்

செப்டம்பர் 4ம் தேதியை, லெபனான் நாட்டிற்காக இறைவேண்டலும், உண்ணாநோன்பும், மேற்கொள்ளும் உலக நாளாகக் கடைபிடிக்கும்படி, உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தையின் அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 4ம் தேதி, லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்தை மனதில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 4 இவ்வெள்ளிக்கிழமையை, லெபனான் நாட்டிற்காக இறைவேண்டலும், உண்ணாநோன்பும், மேற்கொள்ளும் உலக நாளாகக் கடைபிடிக்கும்படி, உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செப்டம்பர் 2, இப்புதனன்று, வத்திக்கானில் உள்ள புனித தமாசோ (San Damaso) திறந்தவெளியரங்கில் மக்களைச் சந்தித்து, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை, இவ்வுரையைக் கேட்க, லெபனான் நாட்டுக் கொடியுடன் வந்திருந்த அருள்பணி பயிற்சியிலிருந்த மாணவர் ஒருவரை, தன் அருகில் அழைத்து, அந்நாட்டுக் கொடியை அவருடன் இணைந்து பற்றியவாறு, அந்நாட்டிற்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள லெபனான் நாடு, சகிப்புத்தன்மை, ஏனைய மதத்தினருக்கு மதிப்பு, ஒருங்கிணைந்த வாழ்வு என்ற பல பண்புகளில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, தற்போது, அந்நாட்டு மக்கள், பொருளாதாரம், மற்றும், அரசியல் தளங்களில் சந்தித்துவரும் நெருக்கடிகளோடு, இந்த விபத்தையும் சந்தித்து, சோர்ந்துள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

கிழக்கு, மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஒரு பாலம் போல் அமைந்திருக்கும் லெபனான் நாடு, இதுவரை வளர்த்துவந்த பல்வேறு நல்ல பண்புகளை, இந்தக் கொள்ளைநோயாலும், வேறுபல நெருக்கடிகளாலும் இழந்துவிடாமல் இருக்க, நாம் அனைவரும் இணைந்து செபிக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

அந்நாட்டு மக்கள், தங்கள் கனவுகளையும், நம்பிக்கையையும் இழக்காமல் வாழ்வதற்கும், அந்நாட்டில் உழைக்கும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவரும், தங்கள் எளிய வாழ்வின் வழியே, அந்நாட்டு மக்களுடன் இணைந்து வாழவும், திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 4ம் தேதியை உலகளாவிய இறைவேண்டல் மற்றும் உண்ணாநோன்பு நாளாகக் கடைபிடிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித தமாசோ வளாகத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று, லெபனான் நாட்டிற்காக, ஒருசில கணங்கள் அமைதியில் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

03 September 2020, 14:42