தேடுதல்

Vatican News
அர்மேனிய கத்தோலிக்கரிடம் கர்தினால் மாரியோ செனாரி அர்மேனிய கத்தோலிக்கரிடம் கர்தினால் மாரியோ செனாரி   (AFP or licensors)

சிரியாவில் நம்பிக்கை செத்துக்கொண்டிருக்கிறது

சிரியாவின் பிரச்சனைகளுக்கு அரசியல் முறைப்படி தீர்வு காணப்படவேண்டும், அந்நாட்டிற்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைவதற்கு, அந்நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவேண்டும் – கர்தினால் செனாரி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரால், அந்நாடு பெரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளதால், வாழ்வுக்குத் தேவையான எல்லாவிதமான அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் துன்புறுகின்றனர் என்றும், அந்நாட்டு மக்களை மறக்கவேண்டாம் என்றும், அந்நாட்டு தலத்திருஅவை தலைவர் ஒருவர், உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிரியாவில், 2011ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்றுவரும் போரால், மக்கள் துன்புறும் நிலை குறித்து, வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த, சிரியாவின் திருப்பீடத்தூதர் கர்தினால் மாரியோ செனாரி அவர்கள், இரண்டாம் உலகப் போருக்குப்பின் நிலவும், இத்தகைய கடுமையான மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மக்கள் வெளிவர, உலக சமுதாயம் உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

சிரியாவில் போரால் ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும், ஒரு கோடியே இருபது இலட்சம் பேர், நாட்டுக்குள்ளேயும், நாட்டுக்கு வெளியேயும் புலம்பெயர்ந்துள்ளனர் என்று, கர்தினால் செனாரி அவர்கள் இப்பேட்டியில் குறிப்பிட்டார்.

கோவிட்-19 கொள்ளைநோய் பரவலால், பசி மற்றும், வறுமைக்கோட்டிற்குக்கீழ் தள்ளப்படும் நிலைக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர் என்றுரைத்த கர்தினால் செனாரி அவர்கள், மற்ற நாடுகளின் இராணுவத் தலையீடும், ஆதரவும், சிரியாவில் இடம்பெறும் போருக்கு உரமிடுகின்றன என்றும் கவலை தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில், உலகில், குறிப்பாக, சிரியாவில், இடம்பெற்றுவரும் போர்களை, துண்டு துண்டாக இடம்பெறும் மூன்றாம் உலகப் போர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை, தனது பேட்டியில் சுட்டிக்காட்டிய கர்தினால் செனாரி அவர்கள், சிரியாவின் நெருக்கடிநிலைகளை அகற்றுவதற்கு, ஐ.நா.வின் தூதராகப் பணியாற்றும், நார்வே நாட்டு Geir Pedersen அவர்கள் கடுமையாய் உழைத்து வருகிறார் என்று கூறினார்.

சிரியாவின் பிரச்சனைகளுக்கு அரசியல் முறைப்படி தீர்வு காணப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ள, திருப்பீடத் தூதர் கர்தினால் செனாரி அவர்கள், சிரியாவிற்கு பல்வேறு பிறரன்பு அமைப்புகள் உதவிவருகின்றன என்றும், அந்நாட்டிற்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைவதற்கு, அந்நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

18 September 2020, 14:02