தேடுதல்

மூவேளை செபவுரையின்போது - 200921 மூவேளை செபவுரையின்போது - 200921 

மக்களை நாடிச்செல்லாத திருஅவை, நோயுற்றதாக மாறிவிடும்

வேலையாள்கள் எவ்வளவு மணிநேரம் வேலை செய்தார்கள் என்பதைக் கணக்கிடாமல், அனைவருக்கும் சமமானக் கூலியை வழங்குவது, இறைத்தந்தையின் நன்மைத்தனம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த, 'திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை' குறித்து தன் நண்பகல் மூவேளை செப உரையில் விளக்கிக்கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியில் சென்று, இறைவனுக்கு பணியாட்களைத் தேடவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றார்.

திராட்சைத்தோட்டத்தில் பணிபுரிய வேலையாள்களைத் தேடிச்சென்ற நிலக்கிழார், இறைவனின் அடையாளம் என்றுரைத்த திருத்தந்தை, அதைப்போல் நாமும் இறைவன் தோட்டத்தில் பணிபுரியும் மக்களைத் தேடிச்சென்று உதவுபவர்களாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் மக்களை நாடிச்செல்லாத திருஅவை, தனக்குள்ளேயே முடங்கி, நோயுற்றதாக மாறிவிடும் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைநம்பிக்கையை அனுபவிக்காதவர்கள், இறைவனுடன் கூடிய சந்திப்பில் கிட்டிய ஒளியையும் பலத்தையும் இழந்தவர்கள், என்றும், அனைத்து மக்களையும் நாடி நாம் செல்லவேண்டும் என்றும், தன் மூவேளை செப உரையில் விண்ணப்பித்தார்.

வெளியேச் சென்று, மக்களைத் தேடும் இறைவனைப்போல், நாமும் மக்களைத் தேடிச் செல்லவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆபத்துக்களைக் கண்டு முடங்கிவிடாமல், வெளியில் சென்று நற்செய்தியை அறிவிக்கவேண்டிய திருஅவையின் கடமையை நினைவூட்டினார்.

நீதியையும் தாண்டிய அக்கறை

வேலையாள்கள் எவ்வளவு மணிநேரம் வேலை செய்தார்கள் என்பதைக் கணக்கிடாமல், அனைவருக்கும் சமமானக் கூலியை வழங்கும் நிலக்கிழாரை முன்வைத்து, இறைத்தந்தையின் நன்மைத்தனத்தைப்பற்றி இயேசு எடுத்துரைத்தார் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை'யில் வரும் நிலக்கிழார்போல், இறைவனும், நம் வேலையையோ, அதன் விளைவுகளையோ கணக்கிலெடுக்காமல், நம் தாராள மனத்தையும் பணிக்கென நம்மை கையளிப்பதையும் மட்டுமே நோக்குகிறார் என்று கூறியத் திருத்தந்தை, இறைவனின் நடவடிக்கைகள், நீதியையும் தாண்டிச் சென்று அருளில் நிறைந்துள்ளன என்றார்.

ஞாயிறு டுவிட்டர்

மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி ஞாயிறு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல், கடைசி என்பனவற்றில், மனிதர்கள் நோக்கும் விதத்திற்கும் கடவுள் நடத்தும் விதத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித சிந்தனைகளின்படி பார்க்கும்போது, ஒருவரின் மகத்துவம் என்பது, அவரின் வெற்றிகளைச் சார்ந்து முதலிலிருந்து கடைசி என வரிசைப்படுத்தப்படுகின்றது, ஆனால், இறைத்தந்தையின் கருணைக்கு தங்களை ஒப்படைப்பவர்கள், கடைசி நிலையிலிருந்து, முதல் நிலையில் தங்களைக் கண்டுகொள்வார்கள் என தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

20 September 2020, 13:00