தேடுதல்

மூவேளை செபவுரையின்போது - 160820 மூவேளை செபவுரையின்போது - 160820 

பெலாருஸ் நாட்டில் நீதியும் சட்டங்களும் மதிக்கப்பட அழைப்பு

திருத்தந்தை : பெலாருஸ் நாட்டிற்காக செபிப்பதோடு, அந்நாட்டு மக்கள் அனைவரையும் அமைதியின் அரசியாம் அன்னைமரியாவின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்களுக்குத் துயர்களைக் கொணரும் சூழல்கள் இடம்பெறும் உலகின் பல்வேறு பகுதிகளுக்காக, குறிப்பாக, பெலாருஸ்,  மற்றும், லெபனான் நாடுகளுக்காக அனைவரும் தொடர்ந்து செபிக்குமாறு, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பெலாருஸ் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் குறித்து, கடந்த ஒரு வாரமாக இடம்பெற்றுவரும் வன்முறைகள், மற்றும், குழப்பநிலைகள் குறித்து, தன் மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில், நீதியும், சட்டங்களும், மதிக்கப்பட்டு, வன்முறைகள் ஒதுக்கப்படவேண்டும் என்பதற்கும், உரையாடல் இடம்பெறவேண்டும் என்பதற்கும் அழைப்புவிடுப்பதாக தெரிவித்தார்.

பெலாருஸ் நாட்டிற்காக செபிப்பதோடு, அந்நாட்டு மக்கள் அனைவரையும் அமைதியின் அரசியாம் அன்னைமரியாவின் பாதுகாப்பில் ஒப்படைப்பதாகவும் உறுதி வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1994ம் ஆண்டு முதல் பெலாருஸ் நாட்டின் அதிபராக இருந்துவரும் Alexander Lukashenko அவர்கள், அண்மைத் தேர்தலிலும் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிகண்டுள்ளதாக ஆகஸ்ட் 9ம் தேதி, தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, நாட்டில் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

அரசுத்தலைவர் தேர்தல், முறையாக நடத்தப்படவில்லை என்ற எதிர்ப்புடன் இடம்பெற்றுவரும் மோதல்களால், இதுவரை ஏறத்தாழ 6,700 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2020, 13:38