தேடுதல்

Vatican News
புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னறிவிப்பு ஏதுமின்றி, புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, 'Salus Populi Romani' என்ற பெயர் தாங்கிய அன்னை மரியாவின் திருப்படத்திற்கு முன் செபித்துவிட்டுத் திரும்பினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 5, இப்புதனன்று, புனித மேரி மேஜர் பெருங்கோவில் நேர்ந்தளிக்கப்பட்ட விழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னறிவிப்பு ஏதுமின்றி, இப்பெருங்கோவிலுக்குச் சென்று, ‘உரோம் மக்களுக்கு நலம் வழங்கும் அன்னை’ என்ற பொருள்கொண்ட 'Salus Populi Romani' என்ற பெயர் தாங்கிய அன்னை மரியாவின் திருப்படத்திற்கு முன் செபித்துவிட்டுத் திரும்பினார்.

அன்னை மரியாவின் மீது தனிப்பற்று கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி திருஅவையின் தலைமைப்பொறுப்பை ஏற்றதற்கு அடுத்தநாள், புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று அன்னை மரியாவின் படத்திற்கு முன் செபித்துவிட்டுத் திரும்பினார்.

அதேவண்ணம், அவர், ஒவ்வொரு முறையும், திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பும், பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியதும், அன்னையின் திருப்படத்திற்குமுன் செபிப்பதை தன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கோவிட்-19 கொள்ளைநோயின் உலகளாவியப் பரவலையடுத்து, இவ்வாண்டு, மார்ச் 27, வெள்ளியன்று, மக்களின் பங்கேற்பு ஏதுமின்றி, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் முன்புறம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய Urbi et Orbi வழிபாட்டில், Salus Populi Romani திருப்படமும் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க திருஅவை மரபுப்படி, 358ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, அன்னை மரியா, திருத்தந்தை லிபேரியுஸ் (Liberius) அவர்களுக்குக் காட்சியளித்து, தனக்கு ஒரு கோவிலை எழுப்பும்படியும், அந்தக் கோவில் எழுப்பப்படவேண்டிய இடத்தை தான் ஒரு அடையாளத்தின் வழியே காட்டப்போவதாகவும் கூறினார்.

அடுத்தநாள், அதாவது, உரோம் நகரில், கோடை வெப்பம் கூடுதலாக இருக்கும் ஆகஸ்ட் மாதம், 6ம் தேதி, அந்நகரின் குன்றுகளில் ஒன்றான Esquiline குன்று, பனியால் மூடப்பட்டிருந்த அரிய காட்சி, நகர மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஓர் அடையாளமாக விளங்கியது.

அந்தக் குன்றின் மீது புனித மேரி மேஜர் பெருங்கோவில் கட்டப்பட்டதுடன், இந்த அரிய நிகழ்வின் அடையாளமாக, ஒவ்வொர் ஆண்டும், ஆகஸ்ட் 6ம் தேதி கொண்டாடப்படும் திருநாளன்று, வானிலிருந்து பெய்த பனியை நினைவுறுத்தும்வண்ணம், திருப்பலி நேரத்தில் 'உன்னதங்களிலே' என்ற வானதூதரின் பாடல் ஒலிக்கும்போது, பெருங்கோவிலின் கூரையைத் திறந்து, மல்லிகை மலரின் இதழ்கள் மக்கள் மீது தூவப்பட்டன.

இவ்வாண்டு, இப்புதனன்று காலை, புனித மேரி மேஜர் பெருங்கோவிலின் தலைமை அருள்பணியாளர் கர்தினால் Stanislaw Ryłko அவர்களின் தலைமையில், சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

மாலையில், பேராயர் Piero Marini அவர்களின் தலைமையில், மாலை திருப்புகழ் வழிபாடு நடைபெற்றபோது, அன்னை மரியாவின் புகழ்ப்பாடல் பாடப்பட்ட வேளையில், பெருங்கோவிலின் கூரையிலிருந்து மலர் இதழ்கள் தூவப்பட்டன.

06 August 2020, 13:56