தேடுதல்

Vatican News
வத்திக்கானில் புனித தமாசோ  திறந்தவெளி அரங்கு (கோப்புப்படம் 2019.06.08) வத்திக்கானில் புனித தமாசோ திறந்தவெளி அரங்கு (கோப்புப்படம் 2019.06.08)   (Vatican Media )

மீண்டும், மக்களின் பங்கேற்புடன் புதன் மறைக்கல்வி உரைகள்

செப்டம்பர் 2, வருகிற புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் புதன் மறைக்கல்வி உரை, மக்களின் பங்கேற்புடன் நடைபெறும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தக் கொள்ளைநோயைக் கடந்து, நாம் துவங்கப்போகும் வாழ்வு, எவ்வகையில் அமையவேண்டும் என்பதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 26, தன் புதன் மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்ட இரு கருத்துக்களை, தன் டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டிருந்தார்.

டுவிட்டர் செய்திகள்

"இந்த நெருக்கடி நிலைக்குப்பின், சுற்றுச்சூழல், படைப்பு, நமது பொதுவான இல்லம் ஆகியவற்றைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி, பொருளாதார, சமுதாய அநீதிகளுடன் நம் வாழவைத் தொடரப்போகிறோமா? சிந்திப்போம்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

"படைத்தவர் நமக்கு வழங்கியுள்ள நன்மைகளை பேணிக்காத்தால், அனைவரும் குறையின்றி வாழும்வண்ணம், நம்மிடம் உள்ளவற்றை, பொதுநலனுக்கென வைத்தால், நலம்மிக்க, சமத்துவம் நிறைந்த உலகை நம்மால் மீண்டும் உருவாக்கமுடியும்" என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

மக்கள் கலந்துகொள்ளும் மறைக்கல்வி உரைகள்

இதற்கிடையே, செப்டம்பர் 2, வருகிற புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் புதன் மறைக்கல்வி உரை, மக்களின் பங்கேற்புடன் நடைபெறும் என்று, பாப்பிறை இல்லத்தின் அலுவலகம் அறிவித்துள்ளது.

பாப்பிறை இல்லத்தில் அமைந்துள்ள புனித தமாசோ (San Damaso) திறந்தவெளி அரங்கில் நடைபெறவிருக்கும் இந்த மறைக்கல்வி உரை நிகழ்வில், இத்தாலிய அரசு விதித்துள்ள நலவாழ்வுக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2, புதன் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த சந்திப்பிற்கு, காலை 7.30 மணியிலிருந்து அனுமதி வழங்கப்படும் என்றும், இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள நுழைவுச்சீட்டுத் தேவையில்லை என்றும் பாப்பிறை இல்லத்தின் அலுவலகம் கூறியுள்ளது.

26 August 2020, 14:54