தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் @pontifex வலைத்தளப் பக்கம் - கோப்புப் படம் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் @pontifex வலைத்தளப் பக்கம் - கோப்புப் படம் 

கொள்ளைநோய்க்கு, இரு வழிகளில் நமது பதிலிறுப்பு

"இந்த உலகை முழந்தாள்படியிட வைத்துவிட்ட நுண்ணிய கிருமியிலிருந்து குணமடையும் வழியை கண்டுபிடிக்கவேண்டும், அதேவேளை, சமுதாய அநீதி என்ற பெரும் கிருமியிலிருந்தும் நாம் குணம்பெறவேண்டும்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தூய ஆவியாரின் செயல்பாடுகளில் ஒன்றை நினைவுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 20, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"இறைவனைக் குறித்து அறிந்துகொள்வதில் நாம் தொடர்ந்து வளர்வதற்கு தூய ஆவியார் உதவி செய்வாராக, அதன் வழியே, நாம் இறைவனின் அன்பையும், அவரது உண்மையையும் இவ்வுலகில் பரப்ப இயலும்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஆகஸ்ட் 19, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவுசெய்திருந்தார்.

"உலகளாவிய இக்கொள்ளைநோய்க்கு நமது பதிலிறுப்பு இரு வழிகளில் அமையவேண்டும்: இந்த உலகை முழந்தாள்படியிட வைத்துவிட்ட நுண்ணிய கிருமியிலிருந்து குணமடையும் வழியைக் கண்டுபிடிக்கவேண்டும்; அதேவேளை, சமுதாய அநீதி என்ற பெரும் கிருமியிலிருந்தும் நாம் குணம்பெறவேண்டும்" என்ற கருத்தை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

12-12-12 என்ற சிறப்பான எண்கள் கொண்ட நாளன்று, அதாவது, 2012ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்களால் டுவிட்டர் செய்திகள் துவங்கப்பட்டன.

'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார்.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன், மற்றும், அரேபியம், ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஆகஸ்ட் 20, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,749 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 87 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

20 August 2020, 13:51