தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரேசிலுக்கு அனுப்பியுள்ள உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் திருத்தந்தை பிரேசிலுக்கு அனுப்பியுள்ள உயிர்காக்கும் மருத்துவ கருவிகள்  (ANSA)

திருத்தந்தை: பிரேசில் நாட்டுக்கு உயிர்காக்கும் மருத்துவ கருவிகள்

கொரோனா கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு ஏழை நாடுகளுக்கு திருத்தந்தை வழங்கிவரும் உயர்தர தொழில்நுட்ப மருத்துவக்கருவிகள் கிடைப்பதற்கு, “நம்பிக்கை” எனப்படும் இத்தாலிய அரசு-சாரா அமைப்பு உதவிவருகிறது - கர்தினால் Krajewski

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பொருள்களைவிட மனிதர் மேலானவர்கள் என்பதை வலியுறுத்தும், ஆகஸ்ட் 18, இச்செவ்வாய் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“செல்வம், சுவர்களை எழுப்புவதற்கு நம்மைக் கட்டாயப்படுத்தலாம், அதற்கு மாறாக, பொருள்களையும், செல்வங்களையும், உறவுகளாக மாற்றுமாறு, இயேசு, தம் சீடர்களுக்கு அழைப்பு விடுக்கிறார், ஏனெனில், மனிதர், பொருள்களைவிட மதிப்புமிக்கவர்கள், அவர்கள், நாம் கொண்டிருக்கும் எத்தகைய செல்வங்களையும்விட, விலையேறப்பெற்றவர்கள்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.  

பிரேசிலுக்கு மருத்துவ கருவிகள்

மேலும், பிரேசில் நாடு, கோவிட்-19 கொள்ளைநோயால் அதிகம் தாக்கப்பட்டுள்ளவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் மருத்துவமனைகளுக்கு, உயிர்காக்கும் மருத்துவக்கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று, திருத்தந்தையின் தர்மச்செயல்களை ஆற்றுகின்ற, கர்தினால் Konrad Krajewski அவர்கள், ஆகஸ்ட் 17, இத்திங்களன்று அறிவித்தார்.

Dräger நிறுவனம் தயாரித்த எட்டு சுவாசக்கருவிகள் மற்றும், Fuji நிறுவனம் தயாரித்த, உடலுறுப்புக்களை ஆய்வுசெய்யும் (ultrasound scanner) ஆறு கருவிகள் ஆகியவற்றை, திருத்தந்தை வழங்கியுள்ளார் என்றும், இவை, திருத்தந்தையின் பெயரால், கப்பல் வழியாக பிரேசில் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், கர்தினால் Krajewski அவர்கள் கூறினார்.

தற்போதைய கொள்ளைநோயால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள, குழுமங்கள் மற்றும், நாடுகளுக்கு, தாராளமாய் உதவிகள் வழங்கப்படுமாறு, உருக்கமாய் தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை, அதற்கு எடுத்துக்காட்டாய் அவரே இருந்து வருகிறார் என்றும், கர்தினால் Krajewski அவர்கள் கூறினார்.

கொரோனா கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு ஏழை நாடுகளுக்கு  திருத்தந்தை வழங்கிவரும் இந்த உயர்தர தொழில்நுட்ப மருத்துவக்கருவிகள் கிடைப்பதற்கு, “நம்பிக்கை” எனப்படும் இத்தாலிய அரசு-சாரா அமைப்பு உதவி வருகிறது எனவும், கர்தினால் Krajewski அவர்கள் கூறினார்.

மனிதநலம் மற்றும், கல்வி சார்ந்த மனிதாபிமானத் திட்டங்களைச் சிறப்பாக ஆற்றிவரும், இந்த இத்தாலிய அமைப்பு, இந்த மருத்துவக்கருவிகள், நன்கொடையாளர்கள் வழியாக கிடைப்பதற்கு வழியமைப்பதோடு, அவற்றைப் பெறுகின்ற நாடுகளின் மருத்துவமனைகளில், அவற்றைக் கொண்டுசேர்க்கவும் உதவி வருகிறது என்பதையும், கர்தினால் Krajewski அவர்கள், நன்றியுடன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 17, இத்திங்கள் நிலவரப்படி, பிரேசில் நாட்டில், 33 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், 1,07,852 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் இந்த கொள்ளைநோயால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்த நிலையில் பிரேசில் நாடு உள்ளது. 

18 August 2020, 13:24