தேடுதல்

Vatican News
திருத்தந்தை புனித 6ம் பவுல், 1968ல்  கொலம்பியாவில் திருத்தந்தை புனித 6ம் பவுல், 1968ல் கொலம்பியாவில் 

திருத்தந்தை புனித 6ம் பவுல், 1968ல் இலத்தீன் அமெரிக்காவில்

திருத்தந்தை, புனித 6ம் பவுல் அவர்கள், இலத்தீன் அமெரிக்காவில், முதன் முதலில் காலடியைப் பதித்த திருத்தந்தையாவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆன்மீக வாழ்வில் நாம் புரியும் தவறுகள் என்ன என்பது குறித்து, ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாக விளக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நம்மையே நாம் நேர்மையாளர்களாக நம்புவதே, அனைத்து ஆன்மீகத் தவறுகளுக்கும் ஆணிவேர், நம்மையே நேர்மையாளர்களாகக் கருதுவது என்பது, ஒரே நேர்மையாளராகிய கடவுளைப் புறம்தள்ளுவதாகும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இச்செவ்வாயன்று இடம்பெற்றிருந்தன.

இலத்தீன் அமெரிக்காவில் திருத்தந்தை புனித 6ம் பவுல்

மேலும், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், இலத்தீன் அமெரிக்காவிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தை என்பதை, வத்திக்கான் செய்தித்துறை இந்நாள்களில் நினைவுகூர்ந்துள்ளது.

52 ஆண்டுகளுக்குமுன், 1968ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி முதல், 25ம் தேதி வரை, இலத்தீன் அமெரிக்காவில், முதன் முதலில் காலடியைப் பதித்த திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், கொலம்பியா நாட்டின் பொகோட்டா நகர் சென்று, பிறரன்பு மற்றும், நீதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

72 மணி நேரத்தில், ஏறத்தாழ 20 பயணத்திட்டங்களை நிறைவேற்றிய திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், இத்திருத்தூதுப்பயணத்தில், தென் அமெரிக்கா மற்றும், மத்திய அமெரிக்காவில் வாழ்கின்ற பழங்குடி இன மக்களோடு, தனது அருகாமையையும், அன்பாதரவையும் தெரிவித்தார்.

பொகோட்டா நகரில் நிறைவேற்றிய திருப்பலியில் கலந்துகொண்ட, ஏறத்தாழ 3 இலட்சம் ஏழை விவசாயிகள் மற்றும், பழங்குடி இன மக்களிடம், மனித வாழ்வுக்கு இன்றியமையாத வசதிகள் இன்றி துன்புறும் உங்களின் நிலையை அறிவேன், உங்களின் அழுகுரல்களை மனித சமுதாயத்திடம் நாங்கள் எழுப்புகிறோம் என்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் கூறினார்.

25 August 2020, 14:25