தேடுதல்

புனித மாக்சிமிலியான் கோல்பே புனித மாக்சிமிலியான் கோல்பே  

புனித மாக்சிமிலியான் கோல்பே, பிறரன்பின் மறைசாட்சி

அமல அன்னை மீது அளவுகடந்த பக்திகொண்டிருந்த புனித மாக்சிமிலியான் கோல்பே அவர்கள், நாத்சி வதைமுகாமில், ஒரு குடும்பத்தின் தந்தையைக் காப்பாற்றுவதற்காக, தன்னுயிரைத் தியாகம் செய்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
நம்பிக்கைக்கு, பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 14, இவ்வெள்ளியன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
“நம்பிக்கைக்கு, பொறுமை அவசியம், நாம் விதைப்பதை வளரச்செய்பவர் இறைவனே என்பதை அறிந்துகொள்வதற்கு, பொறுமை தேவைப்படுகின்றது” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.
பிறரன்பின் மறைசாட்சி
மேலும், ஆகஸ்ட் 14, இவ்வெள்ளியன்று கத்தோலிக்கத் திருஅவை, புனித மாக்சிமிலியான் கோல்பே (Maximilian Kolbe) அவர்களின் திருநாளைச் சிறப்பிக்கின்றது. போலந்து நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் துறவியாகிய இவர், 1941ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி, Auschwitz நாத்சி வதைமுகாமில் கொல்லப்பட்டார்.
பிறரன்பின் மறைசாட்சி என அழைக்கப்படும் இப்புனிதரை, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1971ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அருளாளராகவும், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1982ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி புனிதராகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அமல அன்னை மீது அளவுகடந்த பக்திகொண்டிருந்த புனித மாக்சிமிலியான் கோல்பே அவர்கள், நாத்சி வதைமுகாமில், ஒரு குடும்பத்தின் தந்தைக்கு வாழ்வு கொடுப்பதற்காக, தன்னுயிரைத் தியாகம் செய்தார்.
ஒரு நாள் Auschwitz வதைமுகாமில், கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அதனால் அந்த கைதி பிடிபடும்வரை, அங்கிருந்த கைதிகள் அனைவரையும், பத்து பத்துப் பேராக பட்டினிச் சிறையில் அடைப்பதற்கு, சிறைக்காவலர் தீர்மானித்தார். முதலில் அவர், பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை பட்டினிச் சிறைநோக்கி அழைத்துச்சென்றார். அவர்களில் ஒரு கைதி, போகும் வழியில், ஐயோ, எனது ஏழை மனைவி மற்றும், பிள்ளைகளை இனிமேல் பார்க்கவே முடியாதா என்று கதறினார். அதைக் கேட்ட புனித மாக்சிமிலியான் கோல்பே அவர்கள், அந்தக் கைதிக்குப் பதிலாக, தான் பட்டினிச் சிறைக்குச் செல்வதாகக் கூறி அங்குச் சென்றார். இந்த புனிதர், 1941ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி, நச்சு ஊசி ஏற்றி கொல்லப்பட்டார்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2020, 12:56