தேடுதல்

புனித ஜான் மரிய வியான்னி புனித ஜான் மரிய வியான்னி  

ஒப்புரவு அருட்சாதனத்தில் அதிக நேரம் செலவிட்ட புனிதர்

திருத்தந்தை : இயேசு ஒருவர் மட்டுமே நம்மீது பொழியவல்ல கருணை, மற்றும், இரக்கத்தின் சான்றுகளாக நம் வாழ்வு விளங்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்க அருள்பணியாளர்களின் பாதுகாவலராக விளங்கும் புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் திருவிழா இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, உலகின் அருள்பணியாளர்களுக்கென டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'அன்பு சகோதர அருள்பணியாளர்களே, இயேசு ஒருவர் மட்டுமே நம்மீது பொழியவல்ல கருணை, மற்றும், இரக்கத்தின் சான்றுகளாக நம் வாழ்வு விளங்கவேண்டும் என்ற வரத்தை இறைவனிடம் வேண்டுவோம்' என, அருள்பணியாளர்களை நோக்கி, திருத்தந்தை விடுத்த விண்ணப்பம், ஆகஸ்ட் 4ம் தேதி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தது.

1786ம் ஆண்டு, மே மாதம் 8ம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்த “புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி” அவர்கள்,  சுருக்கமாக, “ஜான் வியான்னி” என்று அறியப்படுகிறார்.

புனித ஜான் வியான்னி, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள “ஆர்ஸ்” (Ars) எனும் சிற்றூரில்  பங்கு அருள்பணியாளராக பணியாற்றச் சென்ற வேளையில், ஃபிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்த அப்பங்கு, இவரின் கடின உழைப்பால் மனம் மாறியது என்று கூறப்படுகிறது.

மரியன்னை மீதும் திருநற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒப்புரவு அருளடையாளம் வழங்குவதில் ஒவ்வொரு நாளும் அதிக நேரத்தை செலவிட்டார்.

அருள்பணியாளர்களின் பாதுகாவலரான இவர், அருள்பணியாளர்கள், மக்களுக்காகத் தவம் செய்ய வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தி செயல்படுத்தினார்.

இறை ஞானத்தின் எளிய வடிவமாக விளங்கிய ஜான் மரிய வியான்னி, 1859ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 4ம் தேதி, இறைவனடி சேர்ந்தார்.

1905ம் ஆண்டு, திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள், இவரை அருளாளராக உயர்த்தி, இவரை ‘பங்குத்தந்தையரின் எடுத்துக்காட்டு’ என்று அறிக்கையிட்டார்.

1925ம் ஆண்டில் இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கிய திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1929ம் ஆண்டு, இவரை, உலகளாவிய பங்குத்தந்தையரின் பாதுகாவலராக அறிவித்தார்.

04 August 2020, 14:01