தேடுதல்

Vatican News
திருத்தந்தை, பேராயர் Giambattista Diquattro திருத்தந்தை, பேராயர் Giambattista Diquattro  (Vatican Media)

பிரேசில் திருப்பீட தூதராக பேராயர் Diquattro

2017ம் ஆண்டிலிருந்து, இந்தியா மற்றும், நேபாளத்தின் திருப்பீட தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் Giambattista Diquattro அவர்கள், பிரேசில் நாட்டின் திருப்பீட தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாள், ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, போர்களிலும், வன்முறையிலும், இயற்கைப் பேரிடர்களிலும் பலியாகும் அப்பாவி மக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில், இச்சனிக்கிழமையன்று நினைவுகூர்ந்துள்ளார்.

“கிறிஸ்துவின் பாஸ்கா பேருண்மையை, நம் வாழ்வின் மையமாக வைப்பது என்பது, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் காயங்கள் பிரசன்னமாக இருக்கின்ற, போர்கள் வன்முறை, வாழ்வு மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சுற்றுச்சூழல் பேரிடர்கள், வறுமை ஆகியவற்றுக்குப் பலியாகும், ஏராளமான அப்பாவி மக்கள் மீது பரிவன்பு காட்டுவதாகும்” என்ற சொற்கள், இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

2009ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 64வது பொது அவையில், அணு ஆய்வுகளுக்கு எதிரான உலக நாள் உருவாக்கப்பட்டு, அந்நாள், ஆகஸ்ட் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உலகில், 1945ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அணு ஆயுதப் பரிசோதனை இடம்பெற்றதிலிருந்து, இதுவரை, ஏறத்தாழ இரண்டாயிரம் அணு ஆயுதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

பேராயர் Giambattista Diquattro

மேலும், 2017ம் ஆண்டிலிருந்து, இந்தியா மற்றும், நேபாளத்தின் திருப்பீட தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் Giambattista Diquattro அவர்களை, பிரேசில் நாட்டின் திருப்பீட தூதராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.

இத்தாலி நாட்டின் பொலோஞ்ஞாவில், 1954ம் ஆண்டில் பிறந்த பேராயர் Diquattro அவர்கள், உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 1985ம் ஆண்டில் திருப்பீட தூதரகப் பணிகளில் இணைந்த இவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு சனவரி 21ம் தேதி, இந்தியா மற்றும், நேபாளத்தின் திருப்பீட தூதராக நியமித்தார்.

கோட்டயம் புதிய துணை ஆயர்

கேரளாவின் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் கோட்டயம் உயர்மறைமாவட்டத்திற்கு, அருள்பணி George Kurisummoottil அவர்கள், துணை ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமையன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.

இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தின் ஜப்பான் நாட்டு புதிய தூதர் Seiji Okada அவர்களிடமிருந்து, நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார்.

29 August 2020, 13:35