தேடுதல்

லொரேத்தோ அன்னை மரியா லொரேத்தோ அன்னை மரியா   (Vatican Media)

லொரேத்தோ யூபிலி ஆண்டு, 2021, டிசம்பர் 10 வரை நீட்டிப்பு

பழங்கால மரபுப்படி, இத்தாலியிலுள்ள லொரேத்தோ பெருங்கோவிலின் புனித வீட்டை, வானதூதர்கள் தூக்கி வந்தனர் என்றும், இதனால் தூண்டப்பட்டு, முதல் உலகப் போரில் விமான ஓட்டுனர்கள், லொரேத்தோ அன்னை மரியாவை தங்கள் பாதுகாவலராகக் கொண்டனர் என்றும் கூறப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேலும், ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமை நண்பகலில் ஆற்றிய, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா குறித்த மூவேளை செப உரை மற்றும், அவ்வுரைக்குப்பின் விடுத்த விண்ணப்பம், ஆகிய இரண்டையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார். 

திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், “கடவுளோடு இருக்கையில் எதுவும் இழக்கப்படுவதில்லை, மரியாவில் இலக்கு எட்டப்பட்டுள்ளது, இவ்வுலகிலுள்ள பொருள்களில் வெற்றிகொள்ள வேண்டாம், ஏனெனில் அவை அழிந்துபோகும், ஆனால், நம் தாயகம் மேலே உள்ளது, அது நிரந்தரமானது  என்பதே, நாம் நடந்துசெல்வதற்கு நம் கண்முன்னே உள்ள காரணம்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “அமைதி, நீதி, மாண்புடைய வாழ்வு ஆகியவற்றுக்கு அதிகத் தாகத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்ற உலகின் அனைத்து சூழல்களுக்காகவும், குறிப்பாக, நைஜீரியாவின் வடக்கே, வன்முறை மற்றும், பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பலியாகியுள்ள மக்களுக்காக, "எதிர்நோக்கின் அன்னை"யின் பரிந்துரையை வேண்டுவோம்” என்ற சொற்கள் வெளியாகியிருந்தன.

லொரேத்தோ யூபிலி பலன்

மேலும், லொரேத்தோ அன்னை மரியா, விமான ஓட்டுனர்களின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அறிவிக்கப்பட்டிருந்த யூபிலி ஆண்டு, 20121ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று, திருப்பீட பாவமன்னிப்பு துறையின் தலைவர் கர்தினால் Mauro Piacenza அவர்கள் அறிவித்துள்ளார்.

கோவிட்-19 தடுப்பு விதிமுறைகளால், மக்களின் பயணங்கள் தடைபட்டுள்ள இவ்வேளையில், லொரேத்தோ திருத்தலத்தின் திருப்பீடப் பிரதிநிதியான, பேராயர் Fabio Dal Cin அவர்கள், குறிப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்திற்கிணங்கி, இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று, கர்தினால் Piacenza அவர்கள் கூறியுள்ளார்.

இந்த யூபிலி ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு பேராயர் Fabio Dal Cin அவர்களும், திருத்தந்தைக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

லொரேத்தோ அன்னை மரியா, விமான ஓட்டுனர்களின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2019ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதி இந்த யூபிலி ஆண்டு துவங்கியது. இந்த ஆண்டு, 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

1920ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், லொரேத்தோ அன்னை மரியாவை, விமான ஓட்டுனர்களின் பாதுகாவலராக அறிவித்தார். அதற்கு மூன்று ஆண்டுகள் சென்று, 1923ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி, இத்தாலிய விமானப்படை உருவாக்கப்பட்டது

15 August 2020, 14:21