தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

நம்மை முழுமையாக கடவுள் முன் வைப்பதே செபம்

திருத்தந்தை : நில நடுக்கங்களாலும், நல்வாழ்வைத் தேடிய பயணத்திலும் உயிரிழந்தோர் குறித்து சிறப்பான விதத்தில் நினைவுகூர்வோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2016ம் ஆண்டு, ஆகஸ்ட் 24ம் தேதி, இத்தாலியின் மையப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும், மெக்சிக்கோவில், 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகஸ்ட் 24ம் தேதியன்று, 72 குடியேற்றத்தார்கள் கொல்லப்பட்டதையும் நினைவுகூரும் வண்ணம், இத்திங்களன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகவும், அவர்கள் நம்பிக்கையிலும், ஒருமைப்பாட்டிலும் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவும், தான் செபிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் செய்தியில், மெக்சிக்கோவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 24ம் தேதியன்று, 72 குடியேற்றத்தார்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து, இன்றும் அந்நிகழ்வு குறித்த உண்மைக்காகவும் நீதிக்காகவும் காத்திருக்கும் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டை வெளியிடுவதாகவும்,  நம்பிக்கையின் பயணத்தின்போது உயிரிழந்த குடியேற்றத்தார்கள் குறித்து இறைவன் நம்மிடம் கணக்கு கேட்பார், எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இத்திங்களன்று திருத்தந்தை வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில், எவ்வித மாயத்தோற்றங்களும், சாக்குபோக்குகளும், நியாயப்படுத்தல்களும் இன்றி, நம்மை முழுமையாக கடவுள் முன் வைப்பதே செபம் ஆகும். ஏனெனில், சாத்தானிடம் இருந்தே இருளும் பொய்யும் பிறக்கின்றன, கடவுளிடமிருந்தோ ஒளியும் உண்மையும் வருகிறது, என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தி, வட மொசாம்பிக்கில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாக இருந்தது.

வட மொசாம்பிக்கின் Cabo Delgado மக்களுடன் என் அருகாமையை வெளியிடுகிறேன், கடந்த ஆண்டு, இந்த அன்புநிறை நாட்டில் திருத்தூது பயணம் மேற்கொண்ட நினைவலைகளுடன், இந்த மக்களை நினைவுகூர்கிறேன், என தன் முதல் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டாரோ, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்த அக்கறையுடன், 'இந்நோய்க்கு பலியானவர்கள் பற்றியும், எண்ணற்ற சுயவிருப்பப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆண், பெண் துறவறத்தார், அருள்பணியாளர்கள்,ஆகியோரையும், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களையும் நினைகூர்வோம்’ என்ற அழைப்பை விடுப்பதாக இருந்தது.

24 August 2020, 13:47