தேடுதல்

நைஜீரியாவில் போராட்டம் நைஜீரியாவில் போராட்டம் 

நைஜீரியா நாட்டு மக்களுக்காக திருத்தந்தை செபம்

அமைதி, நீதி, மாண்புடைய வாழ்வு ஆகியவற்றுக்கு அதிகத் தாகத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்ற உலகிற்காக, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நைஜீரியாவின் வடக்கே, வன்முறை மற்றும், பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பலியானவர்களை, ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமையன்று குறிப்பாக நினைவுகூர்ந்து, இறைவேண்டல் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவாகிய இச்சனிக்கிழமை பகல் 12 மணிக்கு,  வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நைஜீரிய மக்களுக்காக மன்றாடினார்.

அன்பு சகோதரரே, சகோதரிகளே, இன்று நாம், அன்னை மரியாவின் விண்ணக மகிமையை தியானிக்கிறோம், இந்த அன்னை, "எதிர்நோக்கின் அன்னை"யாக இருக்கிறார், அன்னை மரியா, "எதிர்நோக்கின் அன்னை" என்பது, அண்மையில், லொரேத்தோ புகழ் மாலையில் இணைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை கூறினார்.

உலகின் அனைத்து சூழல்களுக்காகவும், குறிப்பாக, அமைதி, நீதி, மாண்புடைய வாழ்வு ஆகியவற்றுக்கு அதிகத் தாகத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்ற உலகிற்காக அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் திருப்பயணிகள் மற்றும், உரோம் மக்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்தப் பெருவிழா நாளில் விடுமுறையில் இருப்பவர்கள் மற்றும், விடுமுறைக்குச் செல்ல வாய்ப்பின்றி இருக்கின்ற, குறிப்பாக, நோயாளிகள், தனிமையில் உள்ளோர், சமுதாயத்திற்கு தவிர்க்க இயலாதப் பணிகளை ஆற்றுவோர் ஆகிய எல்லாருக்கும், அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களையும் திருத்தந்தை தெரிவித்தார்

உரோம் மக்களுக்கு குணமளிக்கும் Salus Populi Romani அன்னை மரியா திருப்படம் நிறுவப்பட்டுள்ள, உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலுக்கு இன்று செல்வது, ஓர் அழகான அடையாளம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2020, 12:40