தேடுதல்

Porziuncola சிற்றாயலம் Porziuncola சிற்றாயலம் 

“அசிசியின் மன்னிப்பை” பெற அனைவருக்கும் அழைப்பு

நம்மிலும், நம்மைச் சுற்றிலும், விண்ணகத்தை உருவாக்கும் கடவுளின் மன்னிப்பை எப்போதும் பெறுவது எவ்வளவு முக்கியமானது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 02, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின், “அசிசியின் மன்னிப்பு” நிகழ்வு குறித்து எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களுக்கு, இயேசுவால் வழங்கப்பட்ட, “அசிசியின் மன்னிப்பு” எனப்படும், பரிபூரண பலன் என்ற வரத்தை, கத்தோலிக்கர் பெறுவதற்கு திருத்தந்தை ஊக்கப்படுத்தினார்.

இந்த பரிபூரண பலனை, ஆகஸ்ட் முதல் தேதி மாலையிலிருந்து, ஆகஸ்ட் 2ம் தேதி நள்ளிரவு வரை பெறலாம் என்றுரைத்த திருத்தந்தை, இந்தப் பலனை இறந்தோருக்காகவும்கூட பெறலாம் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஒப்புரவு மற்றும், நற்கருணை அருளடையாளங்களில் பங்குபெற்று, ஒரு பங்கு ஆலயத்தை அல்லது, ஒரு பிரான்சிஸ்கன் ஆலயத்தை தரிசித்து, விசுவாச அறிக்கை, ஆண்டவர் கற்றுத்தந்த செபம் ஆகியவற்றை, திருத்தந்தைக்காகவும், அவரின் கருத்துக்களுக்காவும் செபிப்பதன் வழியாக, பரிபூரண பலனைப் பெறலாம் என்று திருத்தந்தை விளக்கிக் கூறினார்.

நம்மிலும், நம்மைச் சுற்றிலும், விண்ணகத்தை உருவாக்கும் கடவுளின் மன்னிப்பை எப்போதும் பெறுவது மிகவும் முக்கியமானது என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார். 

 அசிசி மன்னிப்பு

1216ம் ஆண்டு அசிசி நகர் புனித பிரான்சிஸ், Porziuncola சிற்றாயலத்தில், ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருந்தவேளையில், அவருக்கு முன், இயேசுவும், மரியாவும், வானதூதர்களும் தோன்றினர். அப்போது இயேசு, பிரான்சிஸிடம், அவர் விரும்பும் வரம் என்ன என்று கேட்ட வேளையில், தங்கள் பாவங்களுக்காக உண்மையான மன வருத்தத்துடன், மன்னிப்பு தேடி, இந்த சிற்றாலயத்திற்கு ஒப்புரவு அருளடையாளம் பெற வருவோர் அனைவருக்கும், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும் வரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பரிபூரண பலன் தரும் அவ்வரம் வழங்கப்படுவதாகவும், அதனை, புனித பிரான்சிஸ், திருத்தந்தையிடம் கூறவேண்டும் என்றும், இக்காட்சியில் சொல்லப்பட்டதையடுத்து, திருத்தந்தை மூன்றாம் ஒனோரியுஸ் வழியே, இந்த சிறப்பு வரம் கத்தோலிக்கத் திருஅவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த வரம் அறிவிக்கப்பட்ட நாளைக் கொண்டாட, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 1,2 ஆகிய நாள்களில் Porziuncola சிற்றாயலத்தில், மன்னிப்பு விழா சிறப்பிக்கப்படுகிறது.

2016ம் ஆண்டு, இந்த சிறப்பு காட்சியின் 8ம் நூற்றாண்டு நிறைவு என்பதாலும், அவ்வாண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி நடைபெற்றதாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சிற்றாலயத்திற்கு, ஆகஸ்ட் 4ம் தேதி சென்று செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2020, 12:40