தேடுதல்

செஸ்டோகோவா அன்னை மரியாவின் திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம், 2016 செஸ்டோகோவா அன்னை மரியாவின் திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம், 2016 

செஸ்டோகோவா அன்னை மரியாவின் பரிந்துரை

கோவிட் 19 கொள்ளைநோயினால் உருவாகியிருக்கும் பல்வேறு துயரங்களிலிருந்து இவ்வுலகைக் காத்தருள, செஸ்டோகோவா அன்னை மரியாவின் பாதுகாவல் நம் அனைவருக்கும் இவ்வேளையில் தேவை - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 27 இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட புனித மோனிக்கா, மற்றும் ஆகஸ்ட் 28, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் புனித அகஸ்டின் ஆகிய இரு புனிதர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 26ம் தேதி வழங்கிய புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் நினைவுகூர்ந்தார்.

புனித மோனிக்கா, மற்றும் புனித அகஸ்டின்

"நற்செய்தியின் உண்மையை, உளமாரத் தேடும் வரத்தை, இவ்விரு புனிதர்களின் எடுத்துக்காட்டும், பரிந்துரையும் நமக்கு வழங்குவனவாக" என்ற இறைவேண்டலை, திருத்தந்தை தன் மறைக்கல்வி உரைக்குப்பின் எழுப்பினார்.

மேலும், ஆகஸ்ட் 26 இப்புதனன்று, போலந்து நாட்டில் உள்ள செஸ்டோகோவா (Czestochowa) திருத்தலத்தில் சிறப்பிக்கப்பட்ட அன்னை மரியாவின் திருநாளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் சிறப்பாகக் குறிப்பிட்டு, இத்திருத்தலத்தை நாடிச்செல்லும் பக்தர்கள் அனைவரோடும் தானும் உள்ளத்தால் ஒன்றித்திருப்பதாகத் தெரிவித்தார்.

செஸ்டோகோவா அன்னை மரியா

போலந்து நாட்டின் பாதுகாவலராகக் கொண்டாடப்படும் செஸ்டோகோவா அன்னை மரியாவின் திருத்தலத்திற்கு, 2016ம் ஆண்டு தான் நேரில் சென்றதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, தாயன்போடு அந்த அன்னை, போலந்து மக்களை அரவணைத்து காத்தருள வேண்டும் என்று கூறினார்.

கோவிட் 19 கொள்ளைநோயினால் உருவாகியிருக்கும் பல்வேறு துயரங்களிலிருந்து இவ்வுலகைக் காத்தருள, செஸ்டோகோவா அன்னை மரியாவின் பாதுகாவல் நம் அனைவருக்கும் இவ்வேளையில் தேவை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

2016ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி முதல், 31ம் தேதி முடிய போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் நடைபெற்ற 15வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 28ம் தேதி, செஸ்டோகோவா திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றினார்.

செஸ்டோகோவா திருத்தலத்தில் போலந்து ஆயர்கள்

ஆகஸ்ட் 27 இவ்வியாழனன்று, போலந்து ஆயர் பேரவையின் 386வது ஆண்டுக்கூட்டம் செஸ்டோகோவா திருத்தலத்தில் துவங்கியுள்ளதையடுத்து, ஆகஸ்ட் 26, இத்திருத்தலத்தின் கொண்டாட்டங்களில், போலந்து ஆயர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

செஸ்டோகோவா திருத்தலத்தில் வணங்கப்பட்டுவரும் கருநிற அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு முன், போலந்து மக்கள் அனைவரும் இந்தக் கொள்ளைநோய் காலத்தில் உருக்கமாக செபித்து வருகின்றனர் என்று, இத்திருத்தலத்தின் பொறுப்பாளரான அருள்பணி Michal Legan அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

போலந்து நாட்டை பல்வேறு கடினமான நேரங்களில் பாதுகாத்த செஸ்டோகோவா அன்னை மரியா, இந்தக் கொள்ளைநோய் காலத்திலும் தங்களைக் காப்பார் என்று, அருள்பணி Legan அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2020, 12:22