தேடுதல்

 வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெய்ரூட் 

லெபனான் மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாடு

வெடி விபத்தால் துன்புறும் லெபனான் நாட்டிற்கு நன்கொடை வழங்கியுள்ளதன் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுடன் தந்தைக்குரிய தனது நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

மேரி தேரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில், ஆகஸ்ட் 4 இச்செவ்வாயன்று இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கு, 2 இலட்சத்து 50 ஆயிரம் யூரோக்களை அனுப்பியுள்ளார்.

இந்த துன்பம்நிறைந்த நேரத்தில், லெபனான் திருஅவைக்கு உதவும் நோக்கத்தில், முதல்கட்ட உதவியாக, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் வழியாக, இந்த நிதி உதவியை திருத்தந்தை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள இந்த நன்கொடை பற்றி, ஆகஸ்ட் 07, இவ்வெள்ளியன்று அறிவித்த, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, இந்த உதவி வழியாக, மிகவும் துன்புறும் லெபனான் மக்களுடன் திருத்தந்தை, தந்தைக்குரிய தனது நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியது.

மேலும், ஆகஸ்ட் 05, இப்புதன் மறைக்கல்வியுரைக்குப் பின்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் மக்களுடன் தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, அவர்களுக்காகச் செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 4, இச்செவ்வாய் மாலையில், பெய்ரூட் நகரின் துறைமுகத்தில், 2,750 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்கு ஒன்று வெடித்ததில், குறைந்தது 140 பேர் உயிரிழந்துள்ளனர், 5,672 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும், இந்த விபத்தால், ஏறத்தாழ ஒரு இலட்சம் சிறார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, யூனிசெப் அமைப்பு, ஆக்ஸ்ட் 08, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளது.

இந்த வெடி விபத்தில், ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் குடியிருப்புக்களை இழந்துள்ள நிலையில், 4 மருத்துவமனைகள், மற்றும் 10 கிறிஸ்தவ கோவில்கள், 120 பள்ளிகள் உட்பட, பல கட்டடங்கள் முற்றிலும் சேதமாகியுள்ளன.

இந்த வெடி விபத்தில் வெளியாகியுள்ள நச்சுக்காற்று, கொரோனா கொள்ளைநோய் பரவலை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2020, 13:42