தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ்,  அருள்பணி ஃபாபியோ சலேர்னோ திருத்தந்தை பிரான்சிஸ், அருள்பணி ஃபாபியோ சலேர்னோ  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட புதிய செயலர்

திருத்தந்தையின் புதிய செயலர் அருள்பணி ஃபாபியோ சலேர்னோ அவர்கள், இந்நாள்வரை, திருப்பீட செயலகத்தின் வெளியுறவுத் துறையில் பணியாற்றி வந்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், தனிப்பட்ட செயலராக, அருள்பணி ஃபாபியோ சலேர்னோ (Fabio Salerno) அவர்கள், ஆகஸ்ட் 01, இச்சனிக்கிழமையன்று பணியைத் துவக்கினார் என, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர், மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்தார்.

2014ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, திருத்தந்தையின் தனிப்பட்ட செயலராகப் பணியாற்றிவந்த அருள்பணி Yoannis Lahzi Gaid அவர்கள், தனது பணிக்காலத்தை நிறைவுசெய்ததையடுத்து, புதிய செயலராக அருள்பணி சலேர்னோ அவர்கள் பணியைத் துவக்கியுள்ளார்.

அருள்பணி ஃபாபியோ சலேர்னோ அவர்கள், இந்நாள்வரை, திருப்பீட செயலகத்தின் வெளியுறவுத் துறையில் பணியாற்றி வந்தார். இதற்குமுன், இந்தோனேசியாவில் திருப்பீட தூதரகத்தில் செயலராகவும், Strasbourgல் அமைந்துள்ள ஐரோப்பிய அவையின் திருப்பீட தூதரகப் பணி அலுவலகத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.

அருள்பணி ஃபாபியோ சலேர்னோ அவர்கள், 1979ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி இத்தாலியின் கத்தன்சாரோவில் பிறந்தவர். Catanzaro-Squillace உயர்மறைமாவட்டத்திற்கென 2011ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்கு திருநிலைப்படுத்தப்பட்ட இவர், உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். இவர், திருஅவை பாப்பிறை நிறுவனத்திலும் படிப்பை முடித்துள்ளார்.

மேலும், மனித உடன்பிறந்தநிலை என்ற உயர்மட்ட குழுவில் உறுப்பினராகப் பணியாற்றிவரும் அருள்பணி Gaid அவர்கள், அந்தப் பணியைத் தொடர்ந்து ஆற்றுவார் என்றும், புரூனி அவர்கள் அறிவித்தார்.

01 August 2020, 13:11