தேடுதல்

Vatican News
மங்கோலியாவில் அருள்பணி Giorgio Marengo தனது விசுவாசிகளுடன் மங்கோலியாவில் அருள்பணி Giorgio Marengo தனது விசுவாசிகளுடன்  (Afmc (Archivio fotografico Missioni Consolata))

திருத்தந்தையுடன், மங்கோலியாவின் புதிய திருத்தூதுப் பிரதிநிதி

"நம் முகத்திற்கெதிராக கதவைச் சாத்தியவர்கள், நம்மால் மன்னிக்க இயலாதவர்கள் ஆகியோருக்காக செபிப்பதை இறைவன் எதிர்பார்க்கிறார். இறைவேண்டல் மட்டுமே, பிணைக்கப்பட்ட சங்கிலிகளை அவிழ்க்கும், ஒருமைப்பாட்டின் வழியை அமைக்கும்" - திருத்தந்தை டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவேண்டலில் காணப்படும் ஒரு சில பண்புகளை, குறிப்பாக, நம்மால் மன்னிக்க இயலாதோருக்காக இறைவேண்டல் செய்வதன் தேவையை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 13, இவ்வியாழனன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"நாம் இறைவேண்டல் செய்யும்போது, நாம் நினைப்பதுபோல் நினைக்காதவர்கள், நம் முகத்திற்கெதிராக கதவைச் சாத்தியவர்கள், நம்மால் மன்னிக்க இயலாதவர்கள் ஆகியோருக்காக செபிப்பதை இறைவன் எதிர்பார்க்கிறார். இறைவேண்டல் மட்டுமே, பிணைக்கப்பட்ட சங்கிலிகளை அவிழ்க்கும், ஒருமைப்பாட்டின் வழியை அமைக்கும்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

மங்கோலியா நாட்டின் புதிய திருத்தூதுப் பிரதிநிதி

மேலும், மங்கோலியா நாட்டின் புதிய திருத்தூதுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் ஜியார்ஜோ மரெங்கோ (Giorgio Marengo) அவர்களை, ஆகஸ்ட் 12, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனியே சந்தித்துப் பேசினார்.

கொன்சலாத்தோ மறைப்பரப்புப் பணியாளர்கள் சபையைச் சேர்ந்த ஆயர் மரெங்கோ அவர்கள், உரோம் நகரின் கிரகோரியன் மற்றும் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்று, 17 ஆண்டுகளாக மங்கோலியா நாட்டில் பணியாற்றிவந்தார்.

இவ்வாண்டு ஏப்ரல் 2ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், மங்கோலியா திருத்தூதுப் பிரதிநிதியாக நியமனம் பெற்ற 46 வயதான மரெங்கோ அவர்களை, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், ஆகஸ்ட் 8ம் தேதி, தூரின் நகரில் ஆயராகத் திருப்பொழிவு செய்துவைத்தார்.

விளிம்புகளில் வாழ்வோர் மீது திருத்தந்தையின் அக்கறை

"அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்" என்ற விருதுவாக்கை தன் ஆயர் பணிக்கெனத் தேர்ந்துள்ள மரெங்கோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆகஸ்ட் 12 இப்புதனன்று சந்தித்தது, தனக்கு ஒரு பெரும் வரமாக அமைந்தது என்று, வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

மங்கோலியா நாடு, கத்தோலிக்க உலகின் விளிம்புகளில் உள்ள ஒரு நாடு என்றும், விளிம்புகளில் வாழ்வோர் மீது திருத்தந்தை கொண்டுள்ள கனிவை அவருடன் மேற்கொண்ட சந்திப்பில் உணர முடிந்தது என்றும், ஆயர் மரெங்கோ அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

13 August 2020, 13:41