தேடுதல்

ஹிரோஷிமா நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஹிரோஷிமா நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஹிரோஷிமா - 75ம் ஆண்டு நினைவுக்கு திருத்தந்தையின் செய்தி

ஹிரோஷிமா நகர மக்களுக்கு, குறிப்பாக, இந்தத் தாக்குதலிலிருந்து தப்பித்து, இன்றுவரை வாழும் ஹிபாகுஷா (hibakusha) குழுவினருக்கு, என் இதயம் நிறைந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அணுகுண்டு தாக்குதலின் 75ம் ஆண்டு நினைவைக் கடைப்பிடிக்கும் ஹிரோஷிமா நகர மக்களுக்கு, குறிப்பாக, இந்தத் தாக்குதலிலிருந்து தப்பித்து, இன்றுவரை வாழும் ஹிபாகுஷா (hibakusha) என்றறியப்படும் குழுவினருக்கு, என் இதயம் நிறைந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு செய்தியின் வழியே கூறியுள்ளார்.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமா நகரின் மீது, அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொண்ட அணுகுண்டு தாக்குதலையடுத்து, இவ்வாண்டு, அந்நகரில் கடைப்பிடிக்கப்படும் 75ம் ஆண்டு நினைவு நிகழ்வுகளில் பங்கேற்போருக்கென தன் வணக்கத்தைக் கூறியுள்ள திருத்தந்தை, இச்செய்தியை, ஹிரோஷிமா ஆளுநர், Hidehiko Yuzaki அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், ஜப்பான் நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இருநகரங்களிலும் அமைந்துள்ள அமைதி நினைவிடங்களில் தான் செலவிட்ட நேரங்களை, இச்செய்தியின் துவக்கத்தில் திருத்தந்தை நினைவுகூர்ந்துள்ளார்.

அமைதியின் திருப்பயணியாக தான் ஜப்பானுக்கு வந்திருந்ததாகவும், அந்த அமைதியை, ஜப்பான் மக்கள் அனைவருக்கும், குறிப்பாக, அமைதியை அதிகம் விரும்பும் இளையோருக்கு வழங்க விழைவதாகவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

"அணு சக்தியை போருக்குப் பயன்படுத்துவதோ, அணு ஆயுதங்களை வைத்திருப்பதோ, நன்னெறியற்ற செயல்பாடுகள்" என்று, தான் ஹிரோஷிமாவில் கூறிய சொற்களை, இச்செய்தியில் மீண்டும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தக் கொடுமையை முதன்முதல் அடைந்து, இன்று வரை உயிர்வாழும் ஹிபாகுஷா குழுவைச் சார்ந்தவர்கள், நமக்கு ஒரு தொடர் நினைவுறுத்தல்களாக உள்ளனர் என்று இச்செய்தியில் இறுதியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் ஒப்புரவையும், அமைதியையும் கொணர பாடுபடும் அனைவருக்கும் "என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்: 'உங்களுக்குள் சமாதானம் நிலவுவதாக!'" (திருப்பாடல் 122:8) என்ற விவிலியச் சொற்களை, இச்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2020, 13:45