தேடுதல்

Vatican News
பல்கேரியாவில் மரியாவிடம் செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ் பல்கேரியாவில் மரியாவிடம் செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

மாஃபியா குற்றக்கும்பல்களிலிருந்து விடுதலையளிக்க...

நீதி, சுதந்திரம், நேர்மை, தோழமை ஆகிய நற்செய்தி கூறுகளுக்கு ஒத்துவராத, அதிகாரங்கள், மற்றும், கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை வழங்குவதற்கு, புனித கன்னி மரியா மீதுள்ள உண்மையான பக்தி உதவவேண்டும் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மாஃபியா குற்றக்கும்பல்கள், தங்களின் செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் வலுப்படுத்த, அன்னை மரியா பக்தி முயற்சிகளைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கென, உலகளாவிய மரியா பாப்பிறை நிறுவனம் (PAMI) மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குற்றவாளிகள் மற்றும், மாஃபியா குற்றக்கும்பல்கள் தொடர்புடைய கூறுகளை, அலசி ஆய்வுசெய்வதற்கென, “மாஃபியா மற்றும், குற்றவாளிகளின் அமைப்புக்களிலிருந்து மரியாவை விடுதலைசெய்தல்” என்ற தலைப்பில், உலகளாவிய மரியா பாப்பிறை நிறுவனம் தொடங்கியுள்ள புதியதொரு துறைக்கு, நல்வாழ்த்து தெரிவித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நீதி, சுதந்திரம், நேர்மை, தோழமை ஆகிய நற்செய்தி கூறுகளுக்கு ஒத்துவராத, அதிகாரங்கள் மற்றும், கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை வழங்குவதற்கு, புனித கன்னி மரியாவிடம் கொண்டிருக்கும் உண்மையான பக்தி உதவவேண்டும் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய மரியா பாப்பிறை நிறுவனத்தின் தலைவர், பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் Stefano Cecchin அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்த மடல், ஆகஸ்ட் 20, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

அருள்பணி Cecchin அவர்கள், திருத்தந்தையின் இந்த மடல் குறித்தும், மரியா பாப்பிறை நிறுவனம் தொடங்கியுள்ள புதிய துறை குறித்தும், வத்திக்கான் செய்தித்துறைக்கு அளித்துள்ள பேட்டியில், அன்னை மரியா பற்றிய உண்மையான பக்தியை பரப்புவதே, தனது நிறுவனத்தின் நோக்கம் என்று கூறினார்.

பாரம்பரிய பக்திமுயற்சியை பாதுகாத்தல்

உலகெங்கும், குறிப்பாக இத்தாலியில் நிலவும், அன்னை மரியா குறித்த, சமய மற்றும், கலாச்சார மரபுகளை, நாம் மீண்டும் கண்டுணரவேண்டும் என்றும், தொடக்ககால அன்னை மரியா பக்தியை மீள்ஆய்வுசெய்து, அதனைப் பாதுகாக்கவேண்டும் என்றும், அருள்பணி Cecchin அவர்கள் எடுத்துரைத்தார்.

இத்தாலியிலும், உலகெங்கிலும், அன்னை மரியா மற்றும், ஏனைய கத்தோலிக்க பக்திமுயற்சிகள், பலநேரங்களில், மாஃபியா சடங்குமுறைகளோடு இணைக்கப்பட்டுள்ளன என்றும், எடுத்துக்காட்டாக, அன்னை மரியாவின் திருவுருவங்கள் அல்லது படங்கள், பவனியாக எடுத்துச்செல்லப்படுகையில், மாஃபியா அமைப்பு தலைவர்களின் வீடுகளுக்கு முன்பாக அவை தலைவணங்கவேண்டும் என்ற சடங்குமுறை உள்ளது என்றும், மக்களுக்கும், குடும்பங்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை உருவாக்கி, இதனை முற்றிலுமாக ஒழிக்க விரும்புகின்றோம் என்றும்,  அருள்பணி Cecchin அவர்கள் கூறினார்.

பக்தியை தவறாகப் பயன்படுத்துவது, மதம் சார்ந்தது அல்ல, மாறாக, அது, மூடநம்பிக்கை மற்றும், அறிவற்ற பக்தி என்றும் கூறிய, அருள்பணி Cecchin அவர்கள், மாஃபியாத் தலைவர்கள், கடவுள் தங்களோடு இருக்கிறார் என்பதை, மக்களுக்குப் போதிக்க முயற்சி செய்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

மக்களின் சமய உணர்வுகள், விடுதலை வாழ்வுக்கு இட்டுச்செல்லாமல், அடிமைகளாக வைத்திருப்பதற்கு, அவற்றைப் பயன்படுத்த, மாஃபியாத் தலைவர்கள், விரும்புகின்றனர் என்றும், வருகிற செப்டம்பரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தி, அதில், இந்த புதிய துறைக்கு வழிகாட்டுதல்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அருள்பணி  Cecchin அவர்கள் கூறினார்.

இந்த கருத்தரங்கத்தில், இறையியலாளர்கள், மரியியல் வல்லுனர்கள் மட்டுமல்ல, நீதிபதிகள், குற்றவியல் நிபுணர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும், பொதுவான அமைப்புகளின் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்றும், இந்த புதிய துறையின் பலன்கள் பொதுவில் அறிவிக்கப்படுவதற்காக, ஒவ்வோர் ஆண்டும், மே 13ம் தேதி, தேசிய அளவில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்ய தீர்மானித்திருப்பதாகவும், அருள்பணி  Cecchin அவர்கள் கூறினார்.

21 August 2020, 12:39