தேடுதல்

Vatican News
திருப்பீட தூதர், பேராயர் Gianfranco Gallone, சாம்பிய ஆயர் Moses Hamungole திருப்பீட தூதர், பேராயர் Gianfranco Gallone, சாம்பிய ஆயர் Moses Hamungole  

சாம்பியாவில் பசித்திருப்போருக்கென திருத்தந்தை நிதியுதவி

சாம்பியாவில் கோவிட்-19 கொள்ளைநோயால் துன்புறும் மக்களுக்கென ஏற்கனவே மூன்று சுவாசக் கருவிகள் உட்பட, மருத்துவப் பொருள்களை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது, மக்களின் பசியைப் போக்க, ஒரு இலட்சம் யூரோக்களை அனுப்பியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சாம்பியா நாட்டில் தேவையில் இருப்போருக்கு உதவுவதற்கென்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைக்கு, ஒரு இலட்சம் யூரோக்களை நன்கொடையாக வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தெற்கு ஆப்ரிக்க நாடான சாம்பியாவில், கோவிட்-19 கொள்ளைநோயால் துன்புறும் மக்களுக்கென, ஏற்கனவே, மூன்று சுவாசக் கருவிகள் உட்பட, மருத்துவப் பொருள்களை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது, சத்துணவு பற்றாக்குறைவாலும், போதிய உணவின்மையாலும் துன்புறும் அந்நாட்டு மக்களுக்கென்று, இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார்.

சாம்பிய கத்தோலிக்க ஆயர் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ள, ஒரு இலட்சம் யூரோக்கள், மறைமாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (ZCCB) தலைவர் ஆயர் George Lungu அவர்கள், சாம்பியா மற்றும், மலாவி நாடுகளின் திருப்பீட தூதர், பேராயர் Gianfranco Gallone அவர்கள் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம், இந்த உதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.  

ஏற்கனவே பசியாலும், வறுமையாலும் துன்புறும் சாம்பியா, தற்போது கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நலவாழ்வு மற்றும், பொருளாதார நெருக்கடிகளால் அதிகம் துன்புறுகிறது என்று கூறிய ஆயர் Lungu அவர்கள், துன்புறும் தனது நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, உதவி அதிகம் தேவைப்படும் மக்களுக்கு, திருத்தந்தை உதவுமாறு விண்ணப்பித்திருந்தார்.

திருத்தந்தை வழங்கியுள்ள இந்த உதவிகள் பற்றி, சாம்பிய ஆயர் பேரவையின் முகநூலில் பதிவுசெய்துள்ள, ஆயர் பேரவையின் பொதுச் செயலர் அருள்பணி Cleophas Lungu அவர்கள், திருத்தந்தையிடம் உதவிகேட்டு பலர் விண்ணப்பித்திருக்கின்ற போதிலும், அவர் சாம்பியாவைத் தெரிவுசெய்துள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதத்தின் இறுதியில், திருப்பீடத் தூதர் வழியாக, சாம்பியாவுக்கு, 3 சுவாசக் கருவிகள், ஆயிரக்கணக்கான முகக்கவசங்கள், மற்றும் ஏனைய மருத்துவப் பொருள்களை திருத்தந்தை அனுப்பியதன் வழியாக, பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும், இந்த கோவிட்-19 காலத்தில், சாம்பியாவிற்கும், உலகின் பல பகுதிகளுக்கும் திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு செய்திகள அனுப்பி ஆதரவாக இருக்கிறார் என்றும், அருள்பணி Lungo அவர்கள் கூறியுள்ளார்.

14 August 2020, 13:00