தேடுதல்

GERD நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகள் GERD நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகள்  

நைல் நதி குறித்த விவகாரத்தில் கலந்துரையாடலுக்கு அழைப்பு

450 கோடி டாலர் திட்டத்தில் கட்டப்படும் GERD நீர்த்தேக்கம் முடிக்கப்படும்போது, அது ஆப்ரிக்காவிலே மிகப்பெரிய நீர் மின்சக்தி மின்நிலையமாக அமையும்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நைல் நதி குறித்த விவகாரத்தில், எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகள்,  கலந்துரையாடல் வழியாக, அதற்கு தீர்வு காணுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று அழைப்பு விடுத்தார்.

அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவாகிய ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமை நண்பகலில்,  வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நைல் நதி தொடர்பான விவகாரத்தில், எகிப்து, எத்தியோப்பியா மற்றும், சூடான் நாடுகளுக்கு இடையே நிலவும் கடினமான கலந்துரையாடல் சூழல் பற்றி குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில், அனைத்து தரப்பினரும், கலந்துரையாடல் வழியைத் தொடர்ந்து பின்பற்றுமாறும், அதனால், வற்றாத நதியாகிய நைல், வாழ்வின் ஊற்றாகவும், பிரிவினையை அல்ல, மாறாக, ஒன்றிணைப்பதாகவும், பகைமையை அல்லது போரை அல்ல, மாறாக, நட்புறவை ஊக்குவிப்பதாகவும் தொடர்ந்து அமையும் என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

உங்கள் நாடுகளின் அன்பு மக்கள், மற்றும், உலகமனைத்தின் நன்மைக்காக, கலந்துரையாடலே உங்களின் ஒரே தெரிவாக அமையட்டும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

பிரச்சனைக்கு காரணம்

2011ம் ஆண்டு ஏப்ரலில், சூடான் நாட்டு எல்லையிலுள்ள எத்தியோப்பியாவின் Genishangul-Gumuz மாநிலத்தில், நீல நைல் நதியில், மாபெரும் எத்தியோப்பிய மறுமலர்ச்சி நீர்த்தேக்கம் (GERD) கட்டும் பணி தொடங்கப்பட்டது. 450 கோடி டாலர் திட்டத்தில் கட்டப்படும் இந்த நீர்த்தேக்கம் முடிக்கப்படும்போது, அது ஆப்ரிக்காவிலே மிகப்பெரிய நீர் மின்சக்தி மின்நிலையமாக அமையும். இதனால் நைல் நதி பாயும் மற்ற நாடுகளுக்கு நீர்வரத்து குறையும் என்று அஞ்சப்படுகிறது. நீல நைல் நதி, வெள்ளை நைல் நதியுடன், சூடான் நாட்டு கார்ட்டூமில் (Khartoum) ஒன்றாகக் கலந்து, நைல் நதியின் ஏறத்தாழ 85 விழுக்காட்டு நீரைத் தருகிறது.

கலந்துரையாடல்கள்

இதற்கிடையே, இந்த நீர்த்தேக்கம் கட்டப்படத் தொடங்கியதிலிருந்து, இதைச் சார்ந்த நாடுகள் பலமுறை சந்தித்துள்ளன. கடந்த ஜூலை 27ம் தேதி, ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைமையில், இரண்டாவது சுற்று கலந்துரையாடல் தொடங்கியது. ஆகஸ்ட் 10, இத்திங்களன்று துவங்குவதாய் இருந்த மூன்றாவது சுற்று கலந்துரையாடல், ஒரு வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2020, 12:45