தேடுதல்

கடல்சார் பணியாளர்களுக்காக திருத்தந்தையின் இறைவேண்டல்

"கப்பல் பணியாளர்கள், மீன்பிடிப்போர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட, கடலில் பணியாற்றுவோர், மற்றும் கடலைச் சார்ந்து வாழ்வோருக்காக நாம் செபிப்போம்" - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு மாதமும் திருத்தந்தையர் வெளியிட்டு வரும் இறைவேண்டல் கருத்துக்களின் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் மாதத்தின் இறைவேண்டல் கருத்தை கடல்சார் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கென அர்பணித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"கடல்சார் உலகம் - கப்பல் பணியாளர்கள், மீன்பிடிப்போர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட, கடலில் பணியாற்றுவோர், மற்றும் கடலைச் சார்ந்து வாழ்வோருக்காக நாம் செபிப்போம்" என்ற கருத்தை, ஒரு காணொளி வழியே, ஆகஸ்ட் 4, இச்செவ்வாய் மாலையில், திருத்தந்தை வெளியிட்டார்.

கடல் சார் பணிகளில் ஈடுபட்டிருப்போர், அவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு பணிகள், குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் மாசுகளை கடலிலிருந்து அகற்ற தொழிலாளர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான முயற்சிகள், கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள், மற்றும் கடல்சார் பணியாளருக்காகக் காத்திருக்கும் அவர்களது குடும்பங்கள் என்று பலரையும் தொகுத்து வழங்கும் இந்தக் காணொளியில், திருத்தந்தை, தன் இறைவேண்டல் கருத்தை இஸ்பானிய மொழியில் எடுத்துரைக்கிறார்.

கப்பல் பணியாளர்கள், மீன்பிடிப்போர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வு மிகவும் கடினமானது. இவர்களில் பலர், கட்டாயத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர், மேலும் பலர், தொலைதூர நாடுகளில் அனாதைகளாக விடப்படுகின்றனர் என்ற எண்ணத்துடன் திருத்தந்தை தன் எண்ணங்களைத் துவக்குகிறார்.

மீன்பிடித் தொழிலில் உள்ள வர்த்தகப் போட்டிகள், கடலில் கலந்துள்ள நச்சுத்தன்மை நிறைந்த கழிவுகள் ஆகியவை, கடல் சார் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வாழ்வை மிகவும் பிரச்சனை நிறைந்ததாக மாற்றுகிறது என்று கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களுடைய பணிகள் நின்றுபோனால், உலகில் பலர் பட்டினியாகக் கிடப்பர் என்றும் கூறியுள்ளார்.

கோவிட் 19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால், கடலிலேயே தங்கவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் சார்பாக, கடந்த இரு மாதங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்று முறை செய்திகளையும், விண்ணப்பங்களையும் எழுப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தையின் இறைவேண்டல் கருத்துக்களை ஒவ்வொரு மாதமும் வெளியிடும் பணியை ஒருங்கிணைக்கும் இயேசு சபையின் திருத்தூது இறைவேண்டல் பணிக்குழுவும், இவ்வாண்டு அக்டோபர் மாதம் தங்கள் நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் 'Stella Maris' அதாவது, 'கடலின் விண்மீன்' என்ற அமைப்பும் ஆகஸ்ட் மாதம் இறைவேண்டல் காணொளியை உருவாக்கியுள்ளனர்.

05 August 2020, 14:39