தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது - 190820 புதன் மறைக்கல்வியுரையின்போது - 190820 

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: இக்காலம் கற்றுத்தந்துள்ள பாடம்

கிறிஸ்தவப் பிறரன்பு என்பது, ஏழைகளுக்கு செவிமடுப்பதற்கும், அவர்களின் பொருளாதார, மற்றும், ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக இருப்பவைகளை நீக்குவதற்கு உழைக்கவும் அழைப்புவிடுக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கோடை விடுமுறைக்குப்பின் ஆகஸ்ட் 5ம் தேதி, தன் நூலக அறையிலிருந்து வழங்கிய மறைக்கல்வி உரையில்,  'உலகை குணமாக்கும்' என்ற தலைப்பில் புதிய ஒரு தொடரை ஆரம்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 12ம் தேதியன்று, கொள்ளைநோய் காலத்தில் மனித மாண்பு குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இவ்வாரம், அதாவது, ஆகஸ்ட் 19ம் தேதியன்று, இந்நோய் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடம் என்ன என்பது குறித்து விளக்கினார். முதலில், புனித பவுல், கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் மடலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. அதன் பின் அவர் உரை தொடர்ந்தது.

சகோதர சகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப்பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள். […] நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்(2 கொரி  8,1-2.9).

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இவ்வுலகை ஆட்டிப்படைத்துவரும் இன்றைய கொள்ளைநோய் குறித்து சிந்தித்துவரும், மறைக்கல்வி தொடரில் நாம், இக்காலம் நமக்கு கற்றுத்தந்துள்ள மிகக் கொடிய கொள்ளைநோய்கள் குறித்து சிந்தித்து வந்துள்ளோம். ஆம், சமூக அநீதி, சரிசம வாய்ப்புக்கள் இன்மை, ஏழைகள் ஒதுக்கப்பட்ட நிலை ஆகியவை, இன்று, மிகப்பெரும் கொள்ளைநோய்களாக உள்ளன என்பதை உணர்ந்துவருகிறோம். இயேசுவின் உண்மை சீடர்களாக வாழவிரும்பினால்,  ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அவரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நாம் செல்ல வேண்டியுள்ளது. கிறிஸ்தவப் பிறரன்பு என்பது, அவர்களுக்கு பொருளுதவி செய்வதையும் தாண்டி, அவர்களுக்கு செவிமடுப்பதற்கும், அவர்களின் பொருளாதார, மற்றும், ஆன்மீக வளர்சசிக்கு தடையாக இருப்பவைகளை நீக்குவதற்கு உழைக்கவும் அழைப்புவிடுக்கிறது. சுமுக நிலைக்கு திரும்புவதற்குரிய நம் ஆவல், பழைய நிலைகளான, சமூக அநீதிகள், மற்றும், சீர்திருத்தங்களை காலதாமதம் செய்தல் ஆகியவைகளை நோக்கித் திரும்புவதாக இருத்தல் கூடாது. பழையவைகளை மாற்றியமைப்பதற்கு நமக்கு தற்போது நல்லதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆம், ஏழைகளின் மனித மாண்பை மதித்து அங்கீகரிப்பதாக, அவர்களை மையம் கொண்டதாக, நன்னெறியுடன் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு. எடுத்துக்காட்டாக, கோவிட்-19 தடுப்பு மருந்துகள், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு, ஏழைகளுக்கும், அதிகம் தேவைப்படுபவர்களுக்கும் கிடைக்காமல் போனால், அது எவ்வளவு சோகம் நிறைந்ததாக இருக்கும்? காயம்பட்ட இவ்வுலகை குணப்படுத்தவும், மனித குலமனைத்தின் உண்மை நலனை ஊக்குவிக்கவும், விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் வேரூன்றியவர்களாக, பிறரன்பை செயல்படுத்தும் வழிகளை நாம் கண்டுகொள்ள, இயேசுவின் நற்செய்தி நமக்கு தூண்டுதலாக இருப்பதாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாளை, அதாவது, ஆகஸ்ட் 20, வியாழனன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் புனித பெர்னார்ட் அவர்களின் திருவிழா பற்றி எடுத்துரைத்து, மறைவல்லுனர் புனித பெர்னார்டு அவர்கள், அன்னைமரி மீது கொண்டிருந்த பக்தி ஈடுபாடு நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருப்பதாக என வேண்டினார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க  ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2020, 12:27