தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது - 260820 புதன் மறைக்கல்வியுரையின்போது - 260820 

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: பொறுப்புள்ள மேற்பார்வையாளர் நாம்

மக்கள் அத்தியாவசிய பொருட்களின்றி வாடும்போது, பேராசைகள், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது, நம்மால் மௌனம் காக்கமுடியாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

'உலகை குணமாக்கும்' என்ற தலைப்பில் புதிய ஒரு தொடரை தன் புதன் மறைக்கல்வி உரையில், இம்மாதம் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொள்ளைநோய் காலத்தில் மனித மாண்பு குறித்தும், இந்நோய் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடம் என்ன என்பது குறித்தும், கடந்த வாரங்களில் விளக்கியதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26, இப்புதனன்று,  இவ்வுலகம், அனைவருக்கும் பொதுவானது என்பது குறித்தும், கிறிஸ்தவ நம்பிக்கை குறித்தும், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். முதலில், விவிலியத்தின் இணைச்சட்ட நூலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. அதன் பின் திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

இணைச்சட்டம் 14:28-29; 15:1, 4-5

மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவ்வாண்டில் விளைகின்ற எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்து, உனது நகரின் வாயிலருகே வை. உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாத லேவியரும், உன் நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்வர். [...] ஏழாம் ஆண்டின் முடிவில், ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். [...]  உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார். நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு.

 

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளே, இன்றையக் கொள்ளைநோயின் சமூக விளைவுகளால் பலர் தங்கள் நம்பிக்கையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வருங்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையாலும், மன உளைச்சல்களாலும் துன்புறும் இன்றைய காலகட்டத்தில், இயேசு வழங்கும் நம்பிக்கை எனும் கொடையை வரவேற்குமாறு உங்களனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த கொள்ளைநோய், நமக்கு, பல்வேறு சமுதாயப் பிரச்சனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது, குறிப்பாக, இவ்வுலகில் காணப்படும் சரிநிகரற்ற தன்மையை. சிலரால், வீட்டிலிருந்தே வேலைசெய்ய முடிகிறது, பலரால், அதுபோல் முடிவதில்லை. சில சமுதாயங்களில், குழந்தைகள், கணனி தொலைத்தொடர்புகள் வழியாக, தங்கள் கல்வியைத் தொடரமுடிகிறது, ஆனால், பலருக்கு, அது சாத்தியமில்லை. இன்று நாம் காணும் சரிசமமற்ற நிலைகளின் அறிகுறிகள், ஒரு சமூக நோயின் வெளிப்பாடாக உள்ளன. ஆம், இது, நோய்வாய்ப்பட்ட பொருளாதாரத்திலிருந்து வரும் ஒரு தொற்றுக்கிருமி. அடிப்படை மனித மதிப்பீடுகளைக் குறித்து அக்கறை கொள்ளாத, அதேவேளை, சரிசமமற்ற பொருளாதார வளர்ச்சியின் கனியே இது.

இன்றைய உலகில், ஒரு சிலர் கைவசம் வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு, ஏனைய மக்கள் அனைவரின் சொத்துக்களைவிட அதிகம். இந்த அநீதி, வானத்தை நோக்கி குரலெழுப்புகிறது. இறைவன், இவ்வுலகம் எனும் தோட்டத்தைப் படைத்து, நம்மை, பொறுப்புள்ள மேற்பார்வையாளர்களாகவே நியமித்தார். இந்த தோட்டத்தின் கனிகள், அனைவருக்கும் பொதுவானதாக, அனைவராலும் பகிரப்படுவதாக இருக்கவேண்டும். ஆனால், சில எல்லைகளையும், கட்டுப்பாடுகளையும் தாண்டிச்சென்று, இவ்வுலகை சுரண்டியதால், பல்லுயிர்களின் இனப்பெருக்க இழப்பிற்கும், தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கும், கடல்மட்ட உயர்வு, மழைக்காடுகள் அழிவு ஆகியவற்றுக்கும் நாம் காரணமாகியுள்ளோம். சமூக சரிசமமற்ற தன்மைகளும், சுற்றுச்சூழல் அழிவும் ஒன்றோடொன்று இணைந்து செல்வதுடன், ஒரே ஆதாரத்தையும் கொண்டுள்ளன. உடன்வாழ் சகோதரர், சகோதரிகளையும், இயற்கையையும், ஏன், கடவுளையும்கூட, தங்கள் சொத்தாக வைத்துக்கொண்டு அதிகாரம் செலுத்த விரும்பும் பாவத்தின் விளைவே இது. படைப்பின் நோக்கம் இதுவல்ல.

அநியாயமாகச் சுரண்டப்படுவதற்கென்று இவ்வுலகம் படைக்கப்படவில்லை. பல இலட்சக்கணக்கான மக்கள், அத்தியாவசியப் பொருட்களின்றி வாடும்போது, சரிசமமற்ற தன்மைகளும், வேலைவாய்ப்புகளற்ற நிலைகளும் சமூக உறவுகளை அச்சுறுத்தும்போது, பேராசைகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது,   நம்மால் மௌனம் காக்க முடியாது. ஆதிகால கிறிஸ்தவர்கள், தங்கள் உடன்வாழ் மக்கள் குறித்து கொண்டிருந்த அக்கறையும், பிறரன்பும் நமக்கு முன்னுதாரணமாகட்டும். உயிர்த்த கிறிஸ்து வழங்கும் அருளை முழுமையாகச் சார்ந்துள்ள நம் கிறிஸ்தவ நம்பிக்கை, இவ்வுலகைக் குணப்படுத்துவதற்கு பணியாற்றவும், நீதியும் சரிசம நிலைகளும் நிறைந்த சமூக ஒழுங்கமைவைக் கட்டியெழுப்பவும் நம்மைத் தூண்டுவதாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2020, 12:23