தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை 230820 மூவேளை செப உரை 230820 

திருத்தந்தை: பிறரன்பே, நிறைவான வாழ்வுக்கு உயரிய பாதை

கிறிஸ்தவப் பிறரன்பு என்பது, வெறும் சமுதாயத்தொண்டாக மட்டும் இருத்தலாகாது, மாறாக, மற்றவரை, இயேசுவின் கண்களாலேயே பார்ப்பதாகும், மற்றும், ஏழைகளின் முகத்தில் இயேசுவைப் பார்ப்பதாகும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இயேசுவில் நம்பிக்கை வைப்பதும், தோழமையுணர்வில் பிறரன்புச் செயல்களை ஆற்றுவதும், நிறைவாழ்வுக்கு வழி என, இயேசு நமக்குக் கூறுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 23, இஞ்ஞாயிறு, மூவேளை செப உரையில் கூறினார்.

“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று, சீமோன் பேதுரு, இயேசுவில் தான் வைத்திருந்த நம்பிக்கையை அறிக்கையிட்டது பற்றிக் கூறும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத்.16:13-20) மையப்படுத்தி, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவில் நம்பிக்கை வைப்பது, பிறரன்புக்கு முழுமையான அர்த்தம் கொடுக்கிறது என்று கூறினார்.

இந்த நற்செய்தி பகுதியில், இயேசு தம் சீடர்களிடம், தமது தனித்துவம் பற்றிக் கேட்டது, சீடர்களுக்கு, தம்மோடு உள்ள உறவை மேலும் வளர்ப்பதற்கு இட்டுச்சென்றது என்றுரைத்த திருத்தந்தை, உண்மையில், இயேசு, தம்மைப் பின்சென்றவர்களோடு, குறிப்பாக, பன்னிரு திருத்தூதர்களோடு மேற்கொண்ட பயணம், அவர்களுக்கு நம்பிக்கையைக் கற்றுக்கொடுத்த பயணமாகும் என்று விளக்கினார்.

பேருண்மையின் முன் தயக்கம்

இயேசு, தம் சீடரிடம், தன்னை மக்கள் யாரென்று சொல்கிறார்கள்? என முதலில் கேட்டார், அதற்குப்பின், நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டபோது, அவர்கள் வாழ்வின் மையத்தையே அவர் தொட்டார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நேரத்தில் மூவேளை செப உரையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களிடம், நீங்கள் ஏன் இயேசுவைப் பின்பற்றுகிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள் என்று கூறினார்.

உறுதியான நம்பிக்கைக்கு பரிசு பாறை

“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று, இயேசுவின் கேள்விக்கு, ஆழ்ந்த நம்பிக்கையுடன், முழுமையான மற்றும், சந்தேகமின்றி பேதுரு அளித்த பதில், இறைத்தந்தையின் ஒரு குறிப்பிட்ட அருள்கொடையின் கனியாகும் என்று திருத்தந்தை கூறினார்.

பேதுரு உடனடியாக அளித்த இந்தப் பதில், விண்ணகக்கொடை என்பதை ஏற்ற இறைமகன் இயேசு, அவரின் நம்பிக்கையை, அசைக்கமுடியாத பாறை என்று பாராட்டி, இந்தப் பாறையின்மேல் தம் திருஅவையைக் கட்டுவற்கு, விரும்பினார் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எனக்கு கிறிஸ்து யார்?

“நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து கேட்கிறார், கருத்தியலின்படி பதில் அளிக்கும் கேள்வி அல்ல இது, மாறாக,  நம்பிக்கையை, அதாவது, வாழ்வை ஈடுபடுத்துவது, ஏனெனில், நம்பிக்கையே வாழ்வு என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவின் இந்தக் கேள்விக்கு நாம் பதில் அளிப்பதற்கு, நமக்குள் இருக்கும் இறைத்தந்தையின் குரலுக்குச் செவிசாய்க்கவேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

நம்பிக்கையில் பிறரன்பு

கிறிஸ்து, நம் வாழ்வின் மையமாக இருந்தால், திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் நமது அர்ப்பணமே இலக்காக இருந்தால், நமக்கு கிறிஸ்து யார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்றுரைத்த திருத்தந்தை, பிறரன்புக்கும், இயேசுவில் நம்பிக்கை வைப்பதற்கும் இடையேயுள்ள உறவு குறித்த சிந்தனைகளையும் வழங்கினார்.

பல்வேறு விதமான வறுமை மற்றும், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு, கத்தோலிக்க சமுதாயங்கள், மேய்ப்புப்பணி அக்கறை காட்டவேண்டும் என்றும், பிறரன்பே, நிறைவான வாழ்வுக்கு அழைத்துச்செல்லும் உயரிய பாதையாகும், அதேநேரம், தோழமையுணர்வில் ஆற்றப்படும் பணிகள், ஆண்டவர் இயேசுவோடு உறவுகொள்வதிலிருந்து நம்மை திசைதிருப்பக்கூடாது என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்தவப் பிறரன்பு என்பது, வெறும் சமுதாயத்தொண்டாக மட்டும் இருக்கக்கூடாது, மாறாக, அது, மற்றவரை, இயேசுவின் கண்களாலேயே பார்ப்பதாகும், மற்றும், ஏழைகளின் முகத்தில் இயேசுவைப் பார்ப்பதாகும் என்றுரைத்த திருத்தந்தை, நம் கிறிஸ்தவப் பயணத்திற்கு, அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்று சொல்லி, ஆகஸ்ட் 23, இஞ்ஞாயிறு, மூவேளை செப உரையை நிறைவுசெய்தார்.

23 August 2020, 12:30