தேடுதல்

வெடி விபத்திற்குப்பின் பெய்ரூட் வெடி விபத்திற்குப்பின் பெய்ரூட் 

லெபனான் மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வுக்கு அழைப்பு

தேசிய அளவில் பெருந்துயரை எதிர்கொள்ளும் லெபனான் நாட்டிற்கு, உலகளாவிய சமுதாயம் தாராளமனதோடு உதவுமாறும், அந்நாட்டின், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் ஆகிய அனைவரும், ஆடம்பரமின்றி, ஏழ்மை வாழ்வுமுறையை மேற்கொள்ளுமாறும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 4 இச்செவ்வாயன்று, லெபனான் நாட்டில் இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன், கத்தோலிக்கத் திருஅவை, தொடர்ந்து தனது உடனிருப்பை வெளிப்படுத்துமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கேட்டுக்கொண்டார்.

ஆகஸ்ட் 09, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, அவ்வுரைக்குப்பின், லெபனான் நாட்டிற்கு, பன்னாட்டு சமுதாயத்தின் உதவி மற்றும், தோழமையுணர்வுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நாள்களில், லெபனான் நாடு பற்றி அடிக்கடி எண்ணிப் பார்க்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை, இச்செவ்வாயன்று  லெபனானில் இடம்பெற்ற கொடூர நிகழ்வு, அந்நாட்டின் பொதுநலனுக்காக, ஒன்றிணைந்து உழைப்பதற்கு, அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.

ஒன்றிணைந்து வாழ்வதற்கு எடுத்துக்காட்டு

லெபனான் நாடு, ஒன்றிணைந்து வாழ்வதற்கு காலங்காலமாக சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறது என்று கூறிய திருத்தந்தை, இக்காலத்தில், ஒன்றிணைந்து வாழ்வதில் பிரச்சனையை சந்தித்து வருகின்ற அந்நாடு, கடவுளின் உதவியுடன், அனைவரின் உண்மையான பங்கெடுப்பின் வழியாக, சுதந்திரம் மற்றும் உறுதியான நாடாக மறுபிறப்பு எடுக்கட்டும் என மன்றாடுகிறேன் என்று கூறினார்.

திறந்த மனம், விரிந்த கரங்கள்

இந்நாள்களில், தங்களின் கல்வாரியில் வாழ்ந்துவரும் லெபனான் மக்களுடன் தோழமை மற்றும் பரிவன்பைக் காட்டி, பகிர்வதில், திறந்த மனம் மற்றும், விரிந்த கரங்களுடன் செயல்பட்டுவரும் அந்நாட்டு திருஅவை, தொடர்ந்து அம்மக்களுடன் தனது அருகாமையை வெளிப்படுத்தி வருமாறு, திருத்தந்தை வலியுறுத்தினார்.

லெபனான் மக்கள், அதிகமாகத் துன்புறுவதால், ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், இருபால் துறவியராகிய நீங்கள் அனைவரும், ஆடம்பர வாழ்வைத் தவிர்த்து, நற்செய்தி கூறும் ஏழ்மையில், அந்நாட்டினரின் வாழ்வுமுறையை பின்பற்றி வாழுமாறும், திருத்தந்தை வலியுறுத்தினார்.

தேசிய அளவில் பெருந்துயரை எதிர்கொள்ளும் லெபனான் நாட்டிற்கு, உலகளாவிய சமுதாயம் தாராளமனதோடு உதவுமாறும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனானின் அரசியாகிய Harissa அன்னை மரியாவிடம் அந்நாட்டிற்காகச் செபித்தார்.

ஆகஸ்ட் 4, இச்செவ்வாய் மாலையில், பெய்ரூட் நகரின் துறைமுகத்தில், 2,750 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்கு ஒன்று வெடித்ததில், குறைந்தது 140 பேர் உயிரிழந்துள்ளனர், 5,672 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும், இந்த விபத்தால், ஏறத்தாழ ஒரு இலட்சம் சிறார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, யூனிசெப் அமைப்பு, ஆக்ஸ்ட் 08, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2020, 12:45