தேடுதல்

Vatican News
Knights of Columbus அமைப்பை உருவாக்கிய வணக்கத்திற்குரிய Michael McGivney Knights of Columbus அமைப்பை உருவாக்கிய வணக்கத்திற்குரிய Michael McGivney  (This item may be protected by copyright. Not to be reproduced without permission of the Knights of Columbus. All rights reserved)

படைப்பாற்றல் மிக்க பிறரன்புப் பணிகள் - திருத்தந்தை பாராட்டு

Knights of Columbus அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தக் கொள்ளைநோய் காலத்தில், படைப்பாற்றல் மிக்க வழிகளில் தங்கள் பிறரன்புப் பணிகளை ஆற்றிவருவதற்காக, திருத்தந்தையின் பாராட்டு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொலம்பசின் மாவீரர்கள் என்று பொருள்படும் Knights of Columbus என்ற அமைப்பினர், திருஅவைக்கு ஆற்றிவரும் மறைபரப்புப் பணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Knights of Columbus அமைப்பைச் சார்ந்தவர்கள், கடந்த வாரம் நடத்திய 138வது உயர்மட்ட சந்திப்பிற்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார்.

கொலம்பசின் மாவீரர்களுக்கு பாராட்டு

திருஅவை வரலாற்றில், Knights of Columbus அமைப்பினர், மறைபரப்புப் பணிக்கும், நற்செய்தியின் பறைசாற்றலுக்கும் ஆற்றிவரும் உதவிகளுக்கு, குறிப்பாக, தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்டு வரும் சகோதரர், சகோதரிகளுக்கு இவ்வமைப்பினர் காட்டிவரும் ஆதரவுக்கு, திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்துள்ளதாக, கர்தினால் பரோலின் அவர்களின் செய்தி கூறுகிறது.

"கொலம்பசின் மாவீரர்கள்: உடன்பிறந்த உணர்வின் மாவீரர்கள்" என்ற தலைப்பில் இவ்வாண்டு நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், கொள்ளைநோயின் காரணமாக இன்றைய உலகம் சந்தித்து வரும் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதற்காக கர்தினால் பரோலின் அவர்கள் சிறப்பான பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

குடும்ப வாழ்வுக்கு முக்கியத்துவம்

Knights of Columbus அமைப்பைச் சேர்ந்தவர்கள், குடும்ப வாழ்வுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருவதற்காகவும், இந்தக் கொள்ளைநோய் காலத்தில், படைப்பாற்றல் மிக்க வழிகளில் தங்கள் பிறரன்புப் பணிகளை ஆற்றிவருவதற்காகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில், கர்தினால் பரோலின் அவர்கள் தன் சிறப்பான நன்றியைக் கூறியுள்ளார்.

Knights of Columbus அமைப்பை உருவாக்கிய வணக்கத்திற்குரிய Michael McGivney அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மே மாதம் ஏற்றுக்கொண்டதால், அவர் அருளாளர் நிலைக்கு உயத்தப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிகழ்வை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அருள்பணியாளர் McGivney என்ற கொடையை வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறும் வேளையில், அவர் துவக்கிவைத்த பணியைத் தொடர, Knights of Columbus அமைப்பைச் சேர்ந்தவர்கள், கூடுதல் அர்ப்பணத்துடன் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

12 August 2020, 13:30