தேடுதல்

Vatican News
பானமா உலக இளையோர் நாள் 2019 பானமா உலக இளையோர் நாள் 2019   (ANSA)

இளைஞர், வயதுமுதிர்ந்தோர், யோவேல் இறைவாக்கு

இளைஞர்கள், மொட்டுகளாகவும், இலைகளாகவும் உள்ளனர், ஆயினும், வேர்கள் இன்றி, அவர்களால் கனிதர இயலாது. வயதுமுதிர்ந்தோர், வேர்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழு ஆண்டுகளுக்குமுன், ஜூலை 26ம் தேதி, பிரேசில் நாட்டில் கத்தோலிக்க இளைஞர் உலக நாளில் விடுத்த அழைப்பு, இக்காலத்திலும், குறிப்பாக, இந்த கோவிட்-19 கொள்ளைநோய் பரவல் காலத்திலும் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது பற்றி, வத்திக்கான் செய்தித்துறை தன் சிந்தனைகளை வழங்கியுள்ளது.

2013ம் ஆண்டு ஜூலை 26ம் தேதியன்று, Rio de Janeiro நகரிலுள்ள பேராயர் இல்லத்தின் மேல் மாடத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மூவேளை செப உரையில், இளைஞர்களும், வயதுமுதிர்ந்தோரும் உரையாடலில் ஈடுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை, கடந்த ஏழு ஆண்டுகளாக, பல நிகழ்வுகளில் இந்த அழைப்பை, தொடர்ந்து விடுத்துவருகிறார் என்றும், கொரோனா கொள்ளைநோய் பரவலால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் விலகல் விதிமுறையில், திருத்தந்தையின் இந்த அழைப்புக்கு நாம் எவ்வளவு கவனம் செலுத்தவேண்டும் என்றும், வத்திக்கான் செய்தித்துறையில் பணியாற்றும் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை 26ம் தேதி, திருஅவை, இயேசுவின் தாத்தா பாட்டியான புனிதர்கள் சுவக்கீன், அன்னா திருநாளைச் சிறப்பிக்கும்வேளை, குடும்பங்களில், இந்த கொள்ளைநோய் பரவல் காலத்தில், வயதுமுதிர்ந்தோர் பராமரிக்கப்படவேண்டும் என்பதை திருத்தந்தையின் அழைப்பு, நம் அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றது என்றும், ஜிசோத்தி அவர்கள் கூறியுள்ளார்

ஒருவர் ஒருவரைச் சார்ந்திருத்தல்

சிறாரும், வயதுமுதிர்ந்தோரும் மக்களின் வருங்காலத்தைக் கட்டியெழுப்புகின்றனர், சிறார், வரலாற்றை முன்னோக்கி நடத்திச் செல்கின்றனர், வயதுமுதிர்ந்தோர், தங்கள் வாழ்வின் அனுபவத்தையும் ஞானத்தையும், அடுத்த தலைமுறைக்கு வழங்குகின்றனர் என்றும் திருத்தந்தை, அச்சமயத்தில் கூறினார்.

இளைஞர்களும், வயதுமுதிர்ந்தோரும், நம் தூக்கியெறியும் (புறக்கணிக்கப்படும்) கலாச்சாரத்திற்கு முதலில் பலியாகுபவர்கள் என்றும், அவர்கள் இருவரும் இணைந்தே, மற்றும் அவர்களால் மட்டுமே, நல்லதொரு வருங்காலத்தைக் காணும் பாதைகள் நோக்கி நடத்திச் செல்லமுடியும் என்றும், திருத்தந்தை கூறினார்.

இளைஞர்கள் புதிய கதவுகளைத் திறப்பதற்கு அழைக்கப்படுகின்றனர் என்றால்,  வயதுமுதிர்ந்தோர், அவற்றின் சாவிகளை வைத்திருக்கின்றனர் என்று, திருத்தந்தை, 2018ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, துறவியருக்கு நிறைவேற்றிய திருப்பலியில் கூறியதையும், ஜிசோத்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கனவுகளின் நிலம்

வேர்கள் இன்றி வளர்ச்சி இல்லை, புதிய மொட்டுகள் இன்றி, பூக்கள் இல்லை, நினைவு இன்றி ஒருபோதும் இறைவாக்கு இல்லை அல்லது, இறைவாக்கு இன்றி நினைவு இல்லை, தொடர்ந்து சந்திப்புகள் அவசியம் என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, இளைஞர்களும், வயதுமுதிர்ந்தோரும் சந்திக்கும் இடம், கனவுகள் என்றும் கூறினார்.

கனவுகள் பற்றி, இறைவாக்கினர் யோவேல் (யோவேல் 2:28) கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, வேர்களும் கனவுகளும் ஒன்றுக்கொன்று சேவையாற்றுகின்றன, இது எக்காலத்தையும்விட இக்காலத்தில் மிகவும் உண்மையாக உள்ளது, ஏனெனில் சமுதாயத்தில் எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்ற தொலைநோக்குப்பார்வை, இக்காலத்தில், நமக்கு மிகவும் தேவைப்படுகின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

யோவேலின் இறைவாக்கு பற்றி வயதுமுதிர்ந்தோருக்கு நினைவுபடுத்திய திருத்தந்தை, கோவிட்-19 தொற்றுக்கிருமியால் அச்சத்தோடு வாழும் வயதுமுதிர்ந்தோரை ஊக்கப்படுத்தியுள்ளார். உங்களின் மரணம் அண்மையில் உள்ளது என, நீங்கள் உணர்வதை அறிந்துள்ளேன், நீங்கள் பயப்படுகிறீர்கள், ஆயினும், நாலாப்பக்கமும் நோக்குங்கள், உங்கள் சிறாரைப் பாருங்கள், கனவு காண்பதை நிறுத்திவிடாதீர்கள், இதையே கடவுள் உங்களிடம் கேட்கிறார் என்று கூறியுள்ளார்.

மொட்டுகள், இலைகள்

ஐரோப்பாவில் கொரோனா கொள்ளைநோய் தாக்கம் பற்றி, The Tablet என்ற ஆங்கில இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைஞர்களுக்கும் வயதுமுதிர்ந்தோருக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகள், ஒருவர் ஒருவரைச் சந்திப்பதன் வழியாகத் தீர்க்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இளைஞர்கள், மொட்டுகளாகவும், இலைகளாகவும் உள்ளனர், ஆயினும் வேர்கள் இன்றி, அவர்களால் கனிதர இயலாது என்றும், வயதுமுதிர்ந்தோரே அவ்வேர்கள் என்றும் கூறிய திருத்தந்தை, இறைவாக்கினர் யோவேலின் கூற்றை (யோவேல் 2:28) நினைவுபடுத்தினார்.

அச்சம் மற்றும் துன்பத்திற்கு இடையே வாழ்ந்துவரும் இந்த இன்னல்நிறைந்த தருணத்தில், இறைவாக்கினர் யோவேலின் கூற்று உண்மையாக்கப்படுவதற்கு இதுவே காலம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அனைவருக்கும் உறுதியுடன் நினைவுபடுத்துகிறார் என்று, ஜிசோத்தி அவர்கள் கூறியுள்ளார்.

“உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள் (யோவேல் 2,28)”

25 July 2020, 13:10