தேடுதல்

Vatican News
கூட்டுறவு அங்காடிகள் அமைப்பு உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப் படம்) கூட்டுறவு அங்காடிகள் அமைப்பு உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப் படம்)   (ANSA)

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு உதவும் கூட்டுறவு இயக்கங்கள்

ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை, கூட்டுறவு இயக்கங்கள் உலக நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூலை 04, இச்சனிக்கிழமையன்று, கூட்டுறவு இயக்கங்கள் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “சில இடங்களில், கூட்டுறவு இயக்கங்கள், புதுப்பிக்கத்தக்க சக்தியால், உள்ளூர் மக்கள் தன்னிறைவு பெறுவதற்கு உதவும் வகையில், வளர்ந்துவருகின்றன, காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டத்தில், குறிப்பிடத்தக்க மாற்றத்தை அவர்களால் கொணர இயலும். அவர்கள் கொண்டிருக்கும் சமுதாய உணர்வுக்கும், பூமியின் மீது கொண்டுள்ள அன்புக்கும் நன்றி” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

பன்னாட்டு கூட்டுறவு இயக்கங்கள் கூட்டமைப்பு

மேலும், இந்நாளுக்கென செய்தி வெளியிட்ட, பன்னாட்டு கூட்டுறவு இயக்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் Ariel Guarco அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமி ஆபத்தில் இருக்கின்றது என்றும், சுற்றுச்சூழலைத் தொடர்ந்து தாக்கிவரும் உற்பத்தி மற்றும், நுகர்வு முறைகள் உள்ளன என்றும், இவற்றை மாற்றுவதற்கு உலகினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இப்பூமியைப் பாதுகாப்பதற்கு, காலத்தைக் கடத்தாமல், நாம் கொண்டிருக்கும் விழுமியங்கள் மற்றும், கொள்கைகளுடன், உடனடியாக, செயலில் இறங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள, Guarco அவர்கள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை உள்ளடக்கிய பொருளாதாரத்தை வளர்க்க, நம்மால் இயலக்கூடிய அனைத்து வழிகளையும் கையாளவேண்டும் என்று கூறியுள்ளார்.  

தற்போதைய காலநிலை மாற்றம், மக்கள் மற்றும், நம் பூமிக்கோளத்தின் முக்கியமான சூழலியல் அமைப்புகளைச் சேதப்படுத்தி, வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் நெருக்கடியான நிலையில் வைத்துள்ளது என்றும், காலநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளைக் களைவதற்கு, உலகளாவிய கூட்டுறவு இயக்கங்கள் முன்வரவேண்டும் என்றும், Guarco அவர்கள் கூறியுள்ளார்.

பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றம், 1990ம் ஆண்டில் இருந்ததைவிட, தற்போது 50 விழுக்காட்டிற்கு அதிகம் என்றும், இதனால் உலக வெப்பநிலை, காலநிலை அமைப்பில் பெரியதொரு மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை, கூட்டுறவு இயக்கங்கள் உலக நாளாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று, 1995ம் ஆண்டில், ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை அறிவித்தது.(UN)

04 July 2020, 13:57