தேடுதல்

Vatican News
2013ம் ஆண்டு, இலாம்பதூசா தீவுக்கு திருத்தந்தை மேற்கொண்ட பயணம் 2013ம் ஆண்டு, இலாம்பதூசா தீவுக்கு திருத்தந்தை மேற்கொண்ட பயணம் 

இலாம்பதூசா நினைவுகள் – கர்தினால் மோன்தெநெக்ரோ

"இலாம்பதூசாவுக்கு நான் பயணித்த ஆண்டு நிறைவின்போது, தங்கள் தாயகத்தைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படும் மக்களில், இயேசுவின் முகத்தை நாம் காண்பதற்காக வேண்டிக்கொள்வோம்" - திருத்தந்தையின் டுவிட்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2013ம் ஆண்டு, ஜூலை 8ம் தேதி, இலாம்பதூசா தீவுக்கு தான் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூரும் வண்ணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜீலை 8, இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "இலாம்பதூசாவுக்கு நான் பயணித்த ஆண்டு நிறைவின்போது, இவ்வுலகைக் காயப்படுத்தும் பல அநீதிகளின் காரணமாக, தங்கள் தாயகத்தைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படும் மக்களில், இயேசுவின் முகத்தை நாம் காண்பதற்காக வேண்டிக்கொள்வோம்" என்ற சொற்களை பதிவு செய்திருந்தார்.

2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகருக்கு வெளியே மேற்கொண்ட முதல் பயணமாக, அவ்வாண்டு, ஜூலை 8ம் தேதி, இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள இலாம்பதூசா தீவுக்குச் சென்று, அங்கு தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த புலம் பெயர்ந்தோரைச் சந்தித்தார்.

அந்த முதல் பயணத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல நாடுகளிலும், திருத்தூதுப் பயணங்கள் மேற்கொண்ட வேளையில், புலம்பெயர்ந்தோரைச் சந்திப்பதை, தன் பயணத்தின் ஒரு முக்கியப் பகுதியாகக் கொண்டிருந்தார்.

இலாம்பதூசா தீவுக்கு தான் மேற்கொண்ட பயணத்தின் ஏழாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வண்ணம், ஜூலை 8, இப்புதன் காலை, 11 மணிக்கு, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஒரு சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை இலாம்பதூசா தீவுக்கு முதல் முறை சென்றவேளையில், அவரை வரவேற்று, உடன்சென்ற ஆக்ரிஜெந்தோ (Agrigento) மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் பிரான்செஸ்கோ மோன்தெநெக்ரோ (Francesco Montenegro) அவர்கள், தன் நினைவுகளைத் தொகுத்து, வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்தார்.

2013ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி திருத்தந்தை மேற்கொண்ட இப்பயணத்தில் உருவான உச்சகட்ட உணர்வுகளை தன் பேட்டியில் நினைவுகூர்ந்த கர்தினால் மோன்தெநெக்ரோ அவர்கள், புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதில், ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து காட்டிவரும் எதிர்ப்புக்களைக் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

அந்நியரை வரவேற்பது கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமான ஒரு பண்பு என்று தன் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால் மோன்தெநெக்ரோ அவர்கள், தொற்றுக்கிருமியின் உலகளாவியப் பரவல் இடம்பெற்றுவரும் இச்சூழலில், புலம்பெயர்ந்தோரைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக மக்களுக்கு அடிக்கடி நினைவுறுத்தி வருவதையும் எடுத்துரைத்தார்.

08 July 2020, 14:42