தேடுதல்

இயேசுவோடு இணைந்து நடத்தல் இயேசுவோடு இணைந்து நடத்தல்  

இயேசுவோடு இணைந்து நடைபோட விசுவாசம் உதவுகிறது

திருத்தந்தை : போர் நிறுத்தங்கள் இடம்பெறவேண்டுமென ஐ.நா. நிறுவனம் நிறைவேற்றியுள்ள தீர்மானம், உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு, துன்புறும் மக்களின் நலனுக்கும், வருங்கால அமைதிக்கும் முதல்படியாக இது அமையட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இவ்வுலகில் இயேசுவோடு இணைந்து நடைபோட நம் விசுவாசம் நமக்கு உதவுகிறது என, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“தீமையின் சக்திகளை, தூய ஆவியாரின் வல்லமை கட்டுப்படுத்தி, கடவுளின் அன்பு சக்திக்கு உட்படுத்தும் என்ற உறுதியுடன், இவ்வுலகப் பாதையில் இயேசுவோடு நாம் இணைந்து நடக்க, நம்பிக்கை உதவுகிறது” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
மேலும், இஞ்ஞாயிறன்று மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து, “தந்தையே உம்மை புகழ்கின்றேன், ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, உமக்காக ஏங்கி, உம்மிடமிருந்தே அனைத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கும் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என எழுதியுள்ளார்.
UNITALSI என்ற பிறரன்பு அமைப்பின் இத்தாலிய தேசிய நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவின்மீது கொண்ட அன்பினாலும், நல்ல சமாரியரின் எடுத்துக்காட்டாலும் தூண்டப்பட்ட இவ்வமைப்பினர், பிறரன்பின் நற்செய்தியையும், ஆறுதலின் மறைப்பணியையும் ஆற்றுபவர்களாக உள்ளனர். நாமும் துன்புறும் மக்களில் இயேசுவின் தசையை கண்டுகொள்வோம், என எடுத்துரைத்துள்ளார்.
இந்த கோவிட்-19 காலத்தில், மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழி அமைக்கும் நோக்கத்தில், உலக அளவில் உடனடி போர் நிறுத்தங்கள் இடம்பெறவேண்டுமென ஐ.நா. நிறுவனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதைப்பற்றி தன் மூன்றாவது டுவிட்டரை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தீர்மானம், உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு, துன்புறும் மக்களின் நலனுக்கும், வருங்கால அமைதிக்கும் முதல்படியாக இது அமையட்டும் என தன் ஆவலை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2020, 14:02